சிராஜ் இனி துணை பவுலர் கிடையாது: பாக். மாஜி கேப்டன் வாசிம் அக்ரம் பாராட்டு
லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜுக்கு இங்கிலாந்து டெஸ்ட்டில் அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற உத்வேகமும் வெற்றி வேட்கையும் இருந்தது. அவருடைய பங்களிப்பு வியக்கத்தக்கது. 5 டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து 185 ஓவர்களை வீசி இருக்கிறார் என்றால் அது சாதாரணமான விஷயம் கிடையாது. அதுவும் கடைசி நாளில் அவர் வீசிய விதம், அவருடைய உடல் தகுதியையும் மன பலத்தையும் காட்டி இருக்கிறது.
இனி சிராஜ் ஒரு துணை பவுலர் கிடையாது. சிராஜ், பும்ரா இல்லாமல் அணியை தலைமை தாங்கி விளையாடி இருக்கிறார். தனது இதயத்தில் இருந்து அவர் செயல்பட்டு இருக்கிறார். ஹாரி புரூக்கின் கேட்சை அவர் கோட்டை விட்ட பின்னும் சிராஜ் தன்னுடைய கவனத்தை விடவில்லை. இது ஒரு போர் வீரருக்கான குணமாகும். சிராஜின் இந்த பந்துவீச்சு பார்க்கும்போது டெஸ்ட் கிரிக்கெட் இன்னும் சிறப்பாகவே இருக்கிறது என நினைக்கத் தோன்றுகிறது.
தற்போது எல்லாம் நான் கிரிக்கெட்டை அவ்வளவாக பார்ப்பதில்லை. ஏனென்றால் நான் வேறு பணியில் இருக்கிறேன். ஆனால் இந்தியா-இங்கிலாந்து மோதிய கடைசி டெஸ்ட்டின் 5வது நாளை பார்க்க அப்படியே உட்கார்ந்து விட்டேன். 5வது நாளில் இந்தியாவின் வெற்றிக்கு நான் 60% தான் வாய்ப்பு இருக்கிறது என்று கூறியிருந்தேன். ஆனால் சிராஜ் ஜெயித்து காட்டிவிட்டார். உண்மையிலே பும்ரா போல ஒரு சிறந்த பவுலருக்கு ஓய்வு வழங்க தைரியம் வேண்டும். இந்தியாவிடம் அது இருக்கிறது. இந்தியாவிடம் திறமை வாய்ந்த கூடுதல் வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய திட்டம் சிறப்பாகவே பலித்திருக்கின்றது. ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை தொடர் அடுத்தடுத்து வருகிறது. இதில் பும்ராவின் பங்கு மிகவும் முக்கியம் என நான் கருதுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சிராஜிக்கு ராக்கி கட்டிய சனாய் போஸ்லே
இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ், பிரபல பாடகியான ஆஷா போஸ்லேவின் பேத்தியான சனாய் போஸ்லே, நேற்று ரக்ஷா பந்தனையொட்டி சிராஜிக்கு சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் கையில் கயிறு கட்டினார். இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள சனாய், ``ராக்கி வாழ்த்துக்கள். இதைவிட சிறந்ததைக் கேட்டிருக்க முடியாது’’ என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இவர்கள் இருவரும் காதலிப்பதாக வதந்தி பரவி வந்த நிலையில், அதற்கு இந்த வீடியோ மூலம் சனாய் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.