‘எஸ்ஐஆர்’... உஷார்
பீகார் மாநிலத்தில் வரும் நவம்பர் 6 மற்றும் 11ம் தேதிகளில் இரண்டு கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதை மனதில் கொண்டு பீகார் மாநிலத்தில் எஸ்ஐஆர் (SIR) எனப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பட்டியலை முதல்கட்டமாக தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதில் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் வரை அதிரடியாக நீக்கப்பட்டிருந்தனர். இது இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சூழலில் நாடு முழுவதும் இரண்டாம் கட்டமாக ‘எஸ்ஐஆர்’ பணிகள் தொடங்கப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு, கேரளா, சட்டீஸ்கர், கோவா, குஜராத், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களிலும் 2ம் கட்டமாக ‘எஸ்ஐஆர்’ பணிகள் துவங்க உள்ளன. தமிழ்நாட்டில் ‘எஸ்ஐஆர்’ பணிகளுக்கு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், வரும் நவ. 4ம் தேதி அனைத்து கட்சிகளையும் அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார். தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, காங்கிரஸ், பாமக, நாதக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல கட்சிகள் ‘எஸ்ஐஆர்’ பணிகளுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. அதேநேரம் அதிமுக இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதற்கு தமிழக மக்கள் தரப்பிலும், வலைத்தளங்களிலும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், ‘‘தேர்தலுக்கு மிக நெருக்கத்தில், அதுவும் பருவமழை காலமான நவம்பர், டிசம்பர் மாதங்களில் ‘எஸ்ஐஆர்’ பணிகளை மேற்கொள்வது நடைமுறைச் சவால்கள் நிறைந்தது. அவசரகதியில் செய்யப்படும் இந்த ‘எஸ்ஐஆர்’ நடவடிக்கை மக்களின் வாக்குரிமையைப் பறித்து, பாஜவுக்கு சாதகமாகத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் சதியாக அமைந்துள்ளது’’ என குறிப்பிட்டுள்ளார். ‘சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சி’ என விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
ஏற்கனவே, பீகார் மாநிலத்தில் நடந்த ‘எஸ்ஐஆர்’ பணிகளில் நீக்கப்பட்டவர்களில் 22 லட்சம் பேர் இறந்துவிட்டதாகவும், 35 லட்சம் பேர் நிரந்தரமாக வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்துவிட்டதாகவும், 7 லட்சம் பேர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், 1.2 லட்சம் பேர் இன்னும் தங்கள் படிவங்களை சமர்ப்பிக்கவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதனை எதிர்த்து எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்களை அளித்திருந்தன. இதுதொடர்பாக விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம் நீக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியலை வெளியிடுமாறு உத்தரவிட்டிருந்தது.
இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களில் 21 லட்சம் பேர் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், 3.66 லட்சம் பேர் நீக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தது. இதன்படி, பீகாரில் மொத்தமாக 47 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தங்களுக்கு சாதகமாக வாக்களிப்பவர்களை தக்க வைத்தும், எதிர்த்து வாக்களிப்பவர்களை இனம் கண்டறிந்து நீக்குவதற்கான பாஜ சதி இது என்று குற்றச்சாட்டு, தொடர்ந்து வலுவாகவே வைக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த ‘எஸ்ஐஆர்’, உஷாராகவே கவனிக்கப்பட வேண்டியது என்ற எதிர்க்கட்சிகளின் வாதத்தை புறம்தள்ள முடியாது. தேர்தல் ஆணையம் இதுதொடர்பாக சரியான விளக்கங்களை அளிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.