எஸ்ஐஆர் மூலம் தமிழகத்தில் வெளிமாநில வாக்காளர்கள் கோடி பேரை சேர்க்க முடிவு: பாஜ மீது செல்வப்பெருந்தகை சாடல்
அவனியாபுரம்: மதுரை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று அளித்த பேட்டி: எஸ்ஐஆர் விவகாரத்தில் பீகாரில் என்ன செய்தார்களோ அதையே தமிழகத்திலும் செய்யப் போகிறார்கள். மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மகாராஷ்டிரா, அரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருப்பவர்கள் தமிழ்நாட்டில் வாக்களிக்கலாம். ஆன்லைனில் அவர்கள் வாக்குகளை பதிவு செய்யலாம் என்று பாஜ கூறுகிறது.
இதன்படி தேர்தல் ஆணையமும், பாஜவும் இணைந்து எங்கெல்லாம் அவர்களின் ஆதரவாளர்கள் இருக்கிறார்களோ அவர்கள் அனைவரையும் தமிழகத்தில் வாக்காளர்களாக மாற்ற முடிவு செய்துள்ளனர். இதன்படி சுமார் ஒரு கோடி வாக்காளர்களை சேர்க்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வந்துள்ளது. அதை தான் முதல்வர் தென்காசியில் பேசியிருக்கிறார். நாங்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்கிறோம்.
தமிழகத்தில் இவர்களின் மோசடியை அனுமதிக்க மாட்டோம். எங்களைப் பொறுத்தவரை எஸ்ஆர்ஐ நடவடிக்கையை முழுமையாக எதிர்க்கிறோம். தமிழகத்திற்கு இது தேவையற்றது. இவ்வளவு காலமாக இருந்தது போலவே, தமிழகத்தில் தேர்தல் நடக்க வேண்டும். மாநில தொழிலாளர் ஆணையத்தில் உள்ள தரவுகளுக்கும், ஒன்றிய அரசின் புள்ளி விவரங்களுக்கும் வேறுபாடுகள் உள்ளன. ஆகவே எஸ்ஐஆர் தற்போது தேவையற்றது. இவ்வாறு கூறினார்.
