எஸ்ஐஆர் எதிர்ப்பு
பீகாரை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இறுதியாக தமிழ்நாட்டில் 2002ம் ஆண்டில் 197 தொகுதிகளிலும், 2005ம் ஆண்டு 37 தொகுதிகளிலும் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் நடந்தன. தற்போது 20 ஆண்டு கழித்து மேற்கொள்ளப்படும் இந்த பணிகளுக்கு தமிழ்நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் கடைசியாக 2025ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி சுமார் 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 68,000க்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் உள்ளன.
ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு வாக்குச்சாவடி அலுவலர் உள்ளார். அவர் தரப்பில் வீடுவீடாக சென்று எஸ்ஐஆர் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த படிவத்தை டிசம்பர் 4ம் தேதிக்குள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். தற்போது எஸ்.ஐ.ஆர் பணிகளில் வாக்காளர்கள் இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகின்றனர். ஒன்று 2002-05 எஸ்ஐஆருக்குப் பிந்தைய வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றவர்கள், இரண்டாவது அதில் இடம்பெறாதவர்கள். கணக்கீட்டுப் படிவத்தில் முதல் கட்டத்தை அனைவருமே நிரப்ப வேண்டும்.
2002-05 எஸ்.ஐ.ஆருக்கு பிந்தைய பட்டியலில் இடம்பெற்றவர்கள் முதல் கட்டத்தை நிரப்பியதோடு இரண்டாவது கட்டத்தில் 2002-05 எஸ்.ஐ.ஆருக்கு பிந்தைய வாக்காளர் பட்டியலில் உள்ள சட்டமன்ற தொகுதி, வாக்காளர் அடையாள அட்டை எண், பாகம் எண் மற்றும் வரிசை எண் உள்ளிட்ட விவரங்களை நிரப்ப வேண்டும். 2005க்குப் பிறகு இடம்பெயர்ந்தவர்கள், முகவரி மாறியவர்களுக்கு பழைய தகவல்களை எடுப்பதில் சிக்கல் எழுகிறது. எனவே 2002-05 எஸ்ஐஆருக்குப் பிந்தைய வாக்காளர் பட்டியலில் உள்ள தகவல்களை இணையத்தில் தெரிந்து கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதில் வாக்காளர் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண் மூலம் விவரங்களைப் பெறலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்காளர் அடையாள அட்டை எண் இல்லையென்றாலும் வாக்காளர் பெயர் மற்றும் வாக்காளர் பட்டியலை வைத்து தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை எல்லாம் பெரிய வேலை. சாதாரண, பாமர மக்களுக்கு கடினம். அவர்களுக்கு உதவ, அரசு ஊழியர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னர் இத்தனை வேகமாக ஏன் செய்ய வேண்டும்? சட்டப்பேரவை தேர்தல் முடிந்த பிறகு செய்யலாம் அல்லது மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது மேற்கொள்ளலாம் என்ற குரல் தேர்தல் ஆணையத்தின் காதுகளுக்கு எட்டவில்லை. இதனால் அதிமுக, பாஜ தவிர ஆளும் திமுக உள்பட அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி உள்ளன.
காங்கிரஸ் கட்சியும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது. ஆனால் அதிதீவிரமாக எஸ்ஐஆர் பணிகளை அமல்படுத்தும் வேலையில் தேர்தல் ஆணையம் தீவிரமாக உள்ளது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆதரவாக உள்ளனர். 2021ம் ஆண்டு கணக்கெடுக்க வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கப்படவில்லை. அதற்கு மோடி அரசு அவசரம் காட்டவில்லை. 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் பணி அது. கொரோனாவை காரணம் காட்டி தள்ளி வைக்கப்பட்டது. 5 வருடங்கள் கடந்து விட்டன. எந்த பதிலும் இல்லை. ஆனால் எஸ்ஐஆர் அமல்படுத்துவதில் மோடி அரசுடன் சேர்ந்து தேர்தல் ஆணையம் காட்டும் தீவிரம் அனைவரையும் சந்தேகப்பட வைத்துள்ளது.