எஸ்ஐஆரை தேர்தல் நடக்கும் மாநிலங்களில் குறைவான நேரத்தில் நடத்துவது சந்தேகத்தை கிளப்புகிறது: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்
சென்னை: எஸ்ஐஆரை தேர்தல் நடக்கும் மாநிலங்களில் குறைவான நேரத்தில் நடத்துவது சந்தேகத்தை உள்ளாக்கியுள்ளதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில தலைமை சார்பாக எஸ்ஐஆர்யை எதிர்கொள்வது எப்படி” எனும் தலைப்பில் சென்னை மண்டல நிர்வாகிகளுக்கான கருத்தரங்கம் மண்ணடியில் உள்ள தலைமையகத்தில் நடந்தது. இந்த கருத்தரங்கில் கணக்கீட்டு படிவத்தை பூர்த்தி செய்யும் முறைகளையும், பழைய வாக்காளர் பட்டியலில் நமது பெயரையும் வாக்காளர் அட்டை குறித்த தகவல்களை தேர்ந்தெடுக்கும் முறைகள் குறித்தும் மாநில செயலாளர் அன்சாரி நிர்வாகிகளுக்கு எடுத்துரைத்தார்.
இக்கருத்தரங்கில் மாநிலத் தலைவர் ஆர். அப்துல் கரீம் பேசுகையில் ‘‘ எஸ்ஐஆரை தேர்தல் நடக்கும் மாநிலங்களில் இத்தனைக் குறைவான நேரத்தில் நடத்துவது, தேர்தல் ஆணையத்தின் நோக்கத்தை சந்தேகத்துக்கு உள்ளாக்குகிறது. ஒன்றிய அரசின் ஆசைக்கிணங்க எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை மிரட்டும் வகையில் தேர்தல் ஆணையம் செயல்படுவதை கண்டிக்கிறோம். தீய நோக்கத்தில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த எஸ்ஐஆர் நடைமுறையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாட உள்ள தமிழக அரசின் நடைமுறையை வரவேற்க தக்கது. இவ்வாறு அவர் பேசினார். எஸ்ஐஆர் குறித்த நிர்வாகிகளின் சந்தேகங்களுக்கு மாநில நிர்வாகிகள் பதிலளித்தனர். கருத்தரங்கில் மாநில பொதுச்செயலாளர் அ.முஜிபுர் ரஹ்மான், பொருளாளர் இப்ராஹிம், மாநிலத்துணைத் தலைவர் கே.தாவூத் கைசர், துணை பொதுச்செயலாளர் ஏ.கே.அப்துர் ரஹீம், மாநிலச் செயலாளர்கள் சித்திக், அன்சாரி, என்.அல் அமீன், அப்துல் முஹ்சின் ஆகியோர் கலந்து கொண்டனர்.