எஸ்ஐஆர் குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்: 99 சதவீதம் பேருக்கு விண்ணப்பம்; இணையத்தில் 60% பேரின் விவரம்
* அதிகாரிகளுக்கே தெளிவு இல்லை
* திமுக சார்பில் குற்றச்சாட்டு
சென்னை: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும் சென்னை மாநகராட்சி ஆணையாளருமான ஜெ.குமரகுருபரன் தலைமையில் நேற்று காலை ரிப்பன் கட்டிடக் கூட்டரங்கில் நடந்தது. கூட்டத்தில், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் கற்பகம், துணை ஆணையர் கட்டா ரவி தேஜா, மாவட்ட வருவாய் அலுவலர்கள் பூஷ்ணா தேவி, சரவணமூர்த்தி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், வாக்காளர் பதிவு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு தீவிர திருத்த பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இச்சிறப்பு தீவிரத் திருத்தத்தின் முக்கிய செயல்முறைகள், முக்கிய நடைமுறைகள் குறித்தும் விரிவாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் விவரிக்கப்பட்டது.கணக்கெடுப்பு படிவங்கள் பெறப்பட்ட அனைத்து வாக்காளர்களின் பெயர்களையும் வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது.
கடந்த சிறப்பு தீவிர திருத்தப் பட்டியலில் பெயர் பொருந்தாத, இணைக்கப்படாத வாக்காளர்களுக்கு அறிவிப்புகள் வழங்குவது. அவ்வாறு அறிவிப்பு வழங்கிய இனங்களுக்கு தகுதியின் அடிப்படையில் விசாரித்து, அவர்களின் பெயரை இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது அல்லது நீக்கம் செய்வது குறித்து முடிவு செய்வது குறித்தும் விவரிக்கப்பட்டது.தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்துக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக டிசம்பர் 4ம்தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது டிசம்பர் 11ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி சார்பில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளில் உள்ள குறைபாடுகள், குளறுபடிகள் குறித்து தெரிவித்தனர். திமுக சார்பில் கலந்து கொண்ட மாநில சட்டத்துறை செயலாளர் வழக்கறிஞர் சந்துரு பேசுகையில், ‘‘ஒன்றிய அரசும் தேர்தல் ஆணையமும் இணைந்து எஸ்ஐஆர் பெயரில் மோசடி செய்து வாக்குத் திருட்டில் ஈடுபடுகிறது.
நேற்று வரை 99 சதவீதம் பேருக்கு விண்ணப்பம் கொடுத்திருப்பதாக சொல்கிறார்கள். ஆனால், 60 சதவீத பேரின் விவரங்களை மட்டும் தான் இணையத்தில் ஏற்றியிருக்கிறார்கள். திமுக கொடுத்த நெருக்கடியால் தான் ஒரு வார காலம் நீட்டிப்பு செய்திருக்கிறார்கள். ஒரு மாதமாகியும் எஸ்ஐஆர் குறித்து அதிகாரிகளுக்கே தெளிவு இல்லை. ஒரு வாரமாக மழை பெய்து மக்கள் வெளியில் வர முடியாத சூழல் நிலவுகிறது.
இந்த ஒரு வார இழப்பை எப்படி ஈடு செய்யப்போகிறார்கள்?. திமுக மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த முகாந்திரமும் ஆதாரமும் இல்லை. இடப்பெயர்வு மற்றும் இறந்தவர்களுக்கான விண்ணப்பத்தை கொடுப்பதில் பிஎல்ஓக்களே குழம்புகிறார்கள்.’ என்றார். இக்கூட்டத்தில், திமுகவை சேர்ந்த மாவட்ட துணை தலைவர் கணேஷ், அதிமுக சார்பில் முன்னாள் எம்பி பாலகங்கா, காங்கிரஸ் சார்பில் கணபதி, பாஜ சார்பில் மாநில பாஜ செயலாளர் கராத்தே, தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.