சின்கியுபீல்ட் கோப்பை செஸ் 5 வது சுற்று போட்டிகளில் குகேஷ், பிரக்ஞானந்தா டிரா
செயின்ட் லூயிஸ்: சின்கியுபீல்ட் கோப்பை செஸ் போட்டியின் 5வது சுற்றில் இந்திய வீரர்களான உலக சாம்பியன் குகேஷ், பிரக்ஞானந்தா ஆடிய போட்டிகள் டிராவில் முடிந்தன. அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் உள்ள செயின்ட் லூயிஸ் நகரல் சின்கியுபீல்ட் கோப்பை செஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. 9 சுற்றுகள் கொண்ட இப்போட்டியின் 5வது சுற்று ஆட்டங்கள் நேற்று நடந்தன.
தமிழகத்தை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, பிரான்ஸ் வீரர் வஷியர் லாக்ரேவ் இடையே நடந்த போட்டி டிராவில் முடிந்தது. அதேபோல், தமிழகத்தை சேர்ந்த உலக சாம்பியன் குகேஷ் போலந்து கிராண்ட் மாஸ்டர் துடா ஜான் கிறிஸ்டாஃப் இடையே நடந்த போட்டியின் இடையே குகேஷ் பல இடங்களில் தடுமாறினார். இருப்பினும் கடைசி கட்டத்தில் சுதாரித்து ஆடியதால் அந்த போட்டி டிராவில் முடிந்தது. நேற்று நடந்த மேலும் 3 போட்டிகள் டிராவில் முடிந்தன.
இதையடுத்து, 5 சுற்றுகள் முடிவில், அமெரிக்க வீரர் பேபியானோ கரவுனா 3.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். அவருக்கு அடுத்த இடங்களில், பிரக்ஞானந்தா, அமெரிக்க வீரர் லெவோன் ஆரோனியன் தலா 3 புள்ளிகளுடன் உள்ளனர். குகேஷ், மேக்ஸிம் வஷியர் லாக்ரேவ், அமெரிக்க வீரர் வெஸ்லி ஸோ ஆகியோர் 2.5 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். இப்போட்டிகளின் முடிவில் முதல் 4 இடங்களை பெறுவோர், இந்தாண்டின் பிற்பகுதியில் நடக்கும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவர்.