சிங்கப்பெருமாள் குளத்தில் மண்டிக்கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும்
*பொதுமக்கள் கோரிக்கை
தஞ்சாவூர் : சிங்கபெருமாள் குளத்தில் மண்டி கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை சீனிவாசபுரம் பகுதியில் சிங்கபெருமாள் குளம் உள்ளது. அறநிலையத்துறை கட்டுபாட்டில் இருக்கும் இந்த குளம் மீன் வளர்ப்புக்காக ஏலம் விடப்பட்டு பராமரிப்புடன் இருந்து வந்தது. தற்போது சிங்கபெருமாள் குளத்தில் மீன் வளர்ப்பு நடைபெறுவது இல்லை.
இதனால், குளம் பராமரிப்பின்றி இருந்து வருகிறது. குளத்தின் கரைகளில் குப்பைகள் கொட்டப்படுகிறது.ஒரு சிலர் குப்பைகளை தீவைத்து கொளுத்தி செல்கின்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. அதுமட்டுமின்றி குளத்தின் ஓரங்களில் ஆகாயத்தாமரைகள் வளரத் தொடங்கி உள்ளன.
இன்னும் சில மாதங்களில் குளம் முழுவதுவம் ஆகாயத்தாமரைகள் அடர்ந்து வளர்ந்துவிடும் சூழல் நிலவுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிங்கபெருமாள் குளத்தில் வளர்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.