ஒரே பதிவு எண்ணில் 3 அரசு பேருந்துகள் என்பது வதந்தி: தமிழ்நாடு அரசு விளக்கம்
ஒரே பதிவு எண்ணில் 3 பேருந்துகள் ஓடுவது சாத்தியமா என்ற குழப்பம் நிலவி வந்த நிலையில், இது திரிக்கப்பட்ட தகவல் என்று தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ‘த.நா. 74 என் 1813’ என்ற இப்பேருந்து கடந்த 2017ம் ஆண்டு பிப்.8ம் தேதி அன்று புதிய பேருந்தாக கூண்டு கட்டி மார்ச் 9ம் தேதி முதல் புறநகர் பேருந்தாக நாகர்கோவில்-திருவனந்தபுரம் தடத்தில் இயக்கப்பட்டது. 3 ஆண்டுகள் கழித்து இந்த பேருந்துக்கு பதில் புதிய பேருந்து இயக்கப்பட்டதால், 2020ம் ஆண்டு ஜன.1ம் தேதி முதல் இது நகர பேருந்தாக இருக்கை மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்பட்டது.
இந்த பேருந்தின் வயது 6ஐ கடந்த நிலையில் அரசாணைப்படி கடந்த ஆண்டு அக்.7ம் தேதி இதன் கூண்டு புதுப்பிக்கப்பட்டு நகர பேருந்தாக நாகர்கோவில்-மேல் மிடாலம் தடத்தில் (தடம் எண்: 9ஏ) இயக்கப்பட்டு வருகிறது என்று கன்னியாகுமரி போக்குவரத்து வணிக மேலாளர் தெரிவித்துள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஒரே பதிவு எண் கொண்ட பேருந்து, வெவ்வேறு காலக்கட்டங்களில், மூன்று தோற்றத்தில் ஓடியதை படம் எடுத்து ஒரே பதிவில் போட்டு அரசுக்கு எதிராக பொய் பரப்புரை மூலம் குழப்பம் ஏற்படுத்த நினைத்தவர்களுக்கு இந்த விளக்கம் பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.