பெண் டாக்டர் பலாத்கார புகார் ; பிரபல ராப் பாடகர் வேடனுக்கு நிபந்தைகளுடன் முன் ஜாமீன்: கேரள உயர்நீதிமன்றம் வழங்கியது
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ஹிரண் தாஸ் முரளி என்ற வேடன். பிரபல ராப் இசை பாடகர். அவர் மீது கொச்சியை சேர்ந்த பெண் டாக்டர் சமீபத்தில் பலாத்கார புகார் கொடுத்தார். திருக்காக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இந்நிலையில் வேடன். முன்ஜாமீன் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை பரிசீலித்த உயர்நீதிமன்றம், முன்ஜாமீன் மனுவில் தீர்ப்பு வழங்கும் வரை வேடனை கைது செய்ய தடை விதித்தது. இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு கொச்சியை சேர்ந்த பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவியும் வேடன் மீது, கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு இமெயில் மூலம் பலாத்கார புகாரை அனுப்பினார்.
இந்த புகார் கொச்சி போலீசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து வேடன் மீது இபிகோ 354, 354 ஏ(1), 294 (பி) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் பெண் டாக்டர் அளித்த புகாரின்பேரில், வேடனுக்கு இன்று நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கி கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. செப்டம்பர் 9ம் தேதி வேடன் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகவேண்டும் என்றும், கைது செய்தால் அவரை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்றும் நீதிபதி பெச்சு குரியன் உத்தரவிட்டுள்ளார்.