2 வருடமாக ரிலேஷன்ஷிப் சித்ரவதை செய்து பணம் பறித்த காதலன்: பாடகி சுசித்ரா பகீர் புகார்
சென்னை: பாடகி சுசித்ரா வெளியிட்ட வீடியோவில் கூறியது: ‘சுச்சி லீக்ஸ்’ என்கிற விவகாரம் என் வாழ்க்கையில வந்தது பிறகு இதைவிட பெரிய விஷயம் எதுவுமே நடக்காது என்று நினைத்திருந்தேன். ஆனால், அதைவிட பெரிய விஷயம் என்னோட வாழ்க்கையில நடந்திருச்சு. கடந்த ரெண்டு வருஷமா நான் ஒருவரை காதலித்து வருகிறேன் அவருடைய பெயர் சண்முகராஜா. என்னுடைய 48வது வயதில், கண்றாவி புடிச்ச ஒரு ரிலேஷன்ஷிப்புக்குள் நான் போய் மாட்டிக்கிட்டேன். என்னோட வாழ்க்கையில் எது எல்லாம் நடக்காது என்று நினைத்து இருந்தேனோ, இந்த ரெண்டு வருஷத்துல அது எல்லாமே என்னோட வாழ்க்கையில நடந்துடுச்சு. ஒரு பேட்டியில் நான் அவரை திருமணம் செய்து கொண்டேன் என்று கூட சொல்லிவிட்டேன். ஏனென்றால் நாங்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருந்தோம்.
என்னுடைய வாழ்க்கையை காப்பாற்றுவது போல அவர் என் வாழ்க்கைக்குள் வந்தார். ‘தனுஷ் உன் வாழ்க்கையை கெடுத்துவிட்டான், கார்த்திக் ராஜாவால் உன் வாழ்க்கையே போய்விட்டது. நானும் வாழ்க்கையில் என் மனைவி, குழந்தைகளால் பெரிய கஷ்டப்பட்டு விட்டேன். இனி மேல் உனக்கு நான் எனக்கு நீ என்று இருப்போம்’ என பல விதமான ஆறுதல் வார்த்தைகளை சொல்லி என்னுடைய வாழ்க்கைக்குள் வந்தான். நானும் அவன் சொல்வது எல்லாம் உண்மை என நினைத்து அவனை காதலிக்க ஆரம்பித்து என்னுடைய பணத்தை எல்லாம் அவரிடம் கொடுத்துவிட்டேன். ஆனால், தினமும் என்னை அடித்து உதைத்து மிதித்து கொடுமைப்படுத்தினான். அவன், முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டேன் என்று தான் சொன்னான். ஆனால், அவனுடைய மனைவி என்னுடைய வீட்டிற்கு வந்து என் கணவனை என்னிடம் கொடுத்து விடு என கெஞ்சுகிறாள்.
நான் எப்போதுமே பெரிய அப்பா டக்கர் போல பேசுவேன். ஆனால், அவனை உண்மையாக காதலித்ததால், என்னுடைய வாழ்க்கைக்காக நான் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்த அனைத்து பணத்தையும் அவன் சுருட்டி விட்டான். அவன் எவ்வளவு பணத்தை என்னிடம் இருந்து பறித்துக் கொண்டான் என்று நான் சொன்னால், நிச்சயமாக உங்களுக்கு தலை சுற்றி விடும். இப்போதுதான் ஒரு தெளிவான முடிவுக்கு வந்து இருக்கிறேன். நான் சண்முகராஜா மீது வழக்கு போட்டு இருக்கிறேன். அவனிடம் ஒரு பைசாவைக்கூட விட்டு வைக்க மாட்டேன். கடைசி பைசாவைக்கூட வாங்கிட்டுத்தான் அவனை நான் விடுவேன். அவன் மீது 6 கேஸ் போடப்போகிறேன். இப்போது ஒரு வழக்கு போட்டுவிட்டேன். சென்னையில் இருக்கும் என் வீட்டில் அவன், முதல் மனைவி குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறான். இன்னும் இரண்டு வாரத்தில் அந்த வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது. இதனால் என்னை அடிக்கடி நீதிமன்றத்தில் நீங்கள் சந்திக்கலாம். இவ்வாறு அந்த வீடியோவில் சுசித்ரா பேசியுள்ளார்.