சிங்கபெருமாள்கோவில் பகுதியில் ஆமை வேகத்தில் நடைமேம்பால பணி: விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
செங்கல்பட்டு: சிங்கபெருமாள்கோவில் பகுதியில் ஆமை வேகத்தில் நடைபெறும் நடைமேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள்கோவில் பகுதியில் தினம் தினம் பல ஆயிரக்கணக்காண மக்கள் வந்து செல்கின்றனர்.
சிங்கபெருமாள்கோவில் மட்டும் இல்லாமல் அதனை சுற்றியுள்ள ஏராளமான கிராம மக்கள் கொண்டமங்கலம், தர்காஸ், அனுமந்தபுரம், திருக்கச்சூர், ஆப்பூர், கொளத்தூர், மல்ரோசாபுரம், கருநீலம், தென்மேல்பாக்கம் ஆகிய கிராமத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் சிங்கபெருமாள்கோவில் பகுதிக்கு வந்து தான் செங்கல்பட்டு அல்லது சென்னை செல்ல வேண்டும். இதுதவிர சென்னை புறநகர் பகுதியில் சிங்கபெருமாள் கோவிலும் முக்கியமான ஒன்று. இது மட்டுமில்லாமல் நட்சத்திர உணவகம், வணிக வளாகங்களும் உள்ளன.
இந்நிலையில் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள், வாகன ஓட்டிகள் ஜிஎஸ்டி தேசிய நெடுஞ்சாலையை கடக்கும்போது தினம் தினம் காலையிலும் மாலையிலும் கடும் போக்குவரத்து நேரிசல் ஏற்படுகிறது. அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. இதனால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை மற்றும் திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலை என இரண்டு தேசிய நெடுஞ்சாலைக்கு நடுவே சிங்கபெருமாள்கோவில் பகுதியில் நடைமேம்பாலம் அமைத்து விபத்தை தவிரிக்கவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.
இதை தொடர்ந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிங்கபெருமாள்கோவில் பகுதியில் நடை மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்த சூழலில் நடைமேம்பாலம் கட்டி முடிக்கப்படாததால் தேசிய நெடுஞ்சாலையை பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடக்கும் போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதுமட்டுமின்றி வியாபாரிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சிங்கபெருமாள்கோவில் பகுதியில் நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் 50 சதவிகிதம் கூட நிறைவுபெறாத நிலையில் உள்ளது. நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பணிகளை வேகப்படுத்த வேண்டும். விரைவில் நடைமேம்பால பணிகள் நிறைவுபெற்று பொதுமக்கள் பயன்பாட்டிக்கு கொண்டு வர வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் வலியுறுத்துகின்றனர்.