7 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்ட சிங்காநல்லூர் அடுக்குமாடி குடியிருப்பு இடிக்கும் பணி மீண்டும் துவங்க திட்டம்
கோவை : கோவை சிங்காநல்லூரில் வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் பழுதடைந்த குடியிருப்புகள் இடிக்கும் பணி 7 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் இடிக்கும் பணிகள் துவங்கப்பட உள்ளது. கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தை பின்புறம், வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் 11 ஏக்கரில் 21 பிளாக்குகளில் 960 வீடுகள் உள்ளன.
இந்த வீடுகள் கட்டப்பட்டு 40 ஆண்டுகளாகிய நிலையில், வீடுகள் பழுதடைந்து உள்ளது. இதனால், பழுதடைந்த வீடுகளை இடித்துவிட்டு, அதே இடத்தில் புதிய வீடுகளை கட்டித்தர வேண்டும் என குடியிருப்புவாசிகள் வலியுறுத்தினர்.
இது தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, குடியிருப்பு வாசிகளுக்கு எவ்வித செலவுமின்றி புதிய குடியிருப்புகள் கட்டிக்கொடுக்க அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து, அரசு, தனியார் இணைந்து புதிய குடியிருப்பு கட்டிடங்கள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதில், வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் மட்டுமின்றி தனியார் நிறுவனம் சார்பிலும் குடியிருப்புகள் கட்டி விற்பனை செய்யப்பட உள்ளன.
இதனை தொடர்ந்து அங்கிருந்த குடியிருப்பு வாசிகளை காலி செய்ய அறிவுறுத்தப்பட்டது. பின்னர், கட்டிடம் இடிக்கும் பணிகள் துவங்கப்பட்டன. அப்போது, ஒரு சிலர் வீடுகளை காலி செய்யாமல் அங்கேயே இருந்து வந்தனர்.
இதனால், கட்டிடத்தை இடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதையடுத்து, அவர்களில் சிலர் வீடுகளை காலி செய்தனர். இதையடுத்து, வீடுகள் இடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இருப்பினும், 7 பிளாக்குகளில் 9 பேர் வீடுகளை காலி செய்யவில்லை. இதனால், அந்த பகுதிகளில் உள்ள 190 வீடுகளை இடிக்கும் பணிகள் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், சமீபத்தில் அடுக்குமாடி குடியிருப்பு சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் முத்துசாமி, மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக், வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மீண்டும் வீடுகளை இடிக்கும் பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: சிங்காநல்லூர் அடுக்குமாடி குடியிருப்பில் தற்போது வரை 70 சதவீதம் வீடுகள் இடிக்கப்பட்டு உள்ளது. இன்னும், 190 வீடுகள் இடிக்கப்பட வேண்டியுள்ளது.
இந்த வீடுகளில் குடியிருந்து வரும் 9 பேர் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் வீடுகளை காலிசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் வீடுகளை காலி செய்தவுடன் வீடுகள் இடிக்கும் பணிகள் மீண்டும் துவங்கப்படும். இதையடுத்து, புதிய வீடுகள் கட்டுமான பணிகள் செப்டம்பரில் துவங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.