பட்டுப்புடவை, விலை உயர்ந்த போன் இருந்தும் கார் வாடகை ரூ.300 தர மறுத்து ஓட்டுநருடன் பெண் வாக்குவாதம்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
குருகிராம்: போக்குவரத்து நெரிசலைக் காரணம் காட்டி, வாடகை கார் ஓட்டுநருக்குப் பயணக் கட்டணம் கொடுக்க மறுத்த பெண், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. டெல்லி அடுத்த குருகிராமில் ஊபர் கார் ஓட்டுநர் ஒருவருக்கும், பெண் பயணி ஒருவருக்கும் இடையே நடந்த காரசாரமான வாக்குவாதம் தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில், பெண் பயணி பயணக் கட்டணமான 300 ரூபாயைக் கொடுக்க மறுத்துள்ளார். ‘போக்குவரத்து நெரிசலால் தாமதமானதற்கு ஓட்டுநரே காரணம்’ என்று அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார். அதற்கு ஓட்டுநரோ, போக்குவரத்து நெரிசல் காரணமாக வெறும் இரண்டு நிமிடங்கள் மட்டுமே தாமதமானதாக விளக்கியுள்ளார். இருப்பினும், அந்தப் பெண் கட்டணத்தைச் செலுத்தாமலேயே காரிலிருந்து இறங்கிச் சென்றுவிட்டார். அவர் இறங்கிச் செல்வதற்கு முன்பு ஓட்டுநர், ‘உங்களால் 300 ரூபாய் கூட கொடுக்க முடியவில்லை; நீங்கள் எல்லாம் காரில் செல்வதற்கு தகுதியானவர் என்று நினைக்கிறீர்களா?’ என்று காட்டமாகக் கூறியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. விலை உயர்ந்த பட்டுப்புடவை அணிந்து, விலையுயர்ந்த செல்போனை வைத்திருந்த அப்பெண்ணின் செயலை இணையதள வாசிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குருகிராமில் போக்குவரத்து நெரிசல் என்பது சாதாரணமான ஒன்று என்றும், அதற்கு ஓட்டுநர் பொறுப்பல்ல என்றும் பலரும் ஓட்டுநருக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.