சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவை மீண்டும் திருப்பி அனுப்பிய கவர்னர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
நெல்லை: நெல்லையில் நேற்று இரவு அவர் அளித்த பேட்டி: தமிழக முதலமைச்சரால் இந்த மாதம் 2ம் தேதி நலம் காக்கும் ஸ்டாலின் என்ற புதிய திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. வருவாய் மாவட்டத்தில் இந்த முகாம்கள் தொடர்ந்து 3 வாரம் நடத்தப்பட்டுள்ளது. நேற்றுடன் 74 முகாம்கள் வாயிலாக 1 லட்சத்து 39 ஆயிரத்து 458 பேர் பயனடைந்துள்ளனர்.ஒவ்வொரு வாரமும் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பயனடைகின்றனர். உடல் உறுப்பு தானம் பெறுவதில் இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது.
சித்த மருத்துவத்திற்கு பல்கலைக்கழக கோரிக்கை ஏற்று இந்த அரசு பொறுப்பேற்ற உடன் சட்டமன்றத்தில் சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் ஒப்புதல் அளிக்காமல் 4, 5 முறை திரும்ப திரும்ப திருப்பி அனுப்பப்பட்டது. 21.8.2025 அன்று மீண்டும் 4 திருத்தங்களுடன் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. சட்டத்துறை திருத்தங்கள் சரி செய்து இந்த வாரத்தில் முடிவு எடுத்து அடுத்த சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஒப்புதல் பெற்று நிறைவேற்றப்படும்.
நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒரு எம்ஆர்ஐ உள்ளது. தேவைப்பட்டால் மற்றொரு எம்ஆர்ஐ கருவி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.கிராம சுகாதார செவிலியர்கள் பணி நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் 30 வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இருந்தன. இந்த வழக்குகள் மூத்த வழக்கறிஞர்கள் வாதம் வைத்து தற்போது முடிக்கப்பட்டுள்ளது. ஓரிருநாளில் தீர்ப்பு விவரம் வந்தவுடன் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபருக்கு பணி ஆணை முதல்வரால் வழங்கப்படும். நேற்று கூட 644 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. 4 மாதங்களுக்கு முன்னர் 2642 மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளது என்றார்.