தேசிய மருத்துவ கண்காணிப்பு வாரத்தை முன்னிட்டு சித்தா மாணவிகள் விழிப்புணர்வு பேரணி
தியாகராஜ நகர் : ஐந்தாவது தேசிய மருத்துவ கண்காணிப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி, பாளை. அரசு சித்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது. நோயாளிகளுக்கு சிகிச்சை மற்றும் மருத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேனர்களை ஏந்தியபடி 250 மாணவ- மாணவிகள் ஊர்வலமாக சென்றனர். கல்லூரி முதல்வர் வேங்கடப்பன், ஊர்வலத்தின் நோக்கம் குறித்து விளக்கிப் பேசி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில்,சித்த மருத்துவ நோய்களுக்கு மருந்து அளிப்பது குறித்த அனைத்து விவரங்களையும் டாக்டர்கள் அறிந்திருப்பார்கள். நோயாளிகள் இந்த அறிவுரைகளை சரியான முறையில் பின்பற்றுவது அவசியம்.அதில் ஏதாவது மாற்றம் இருந்தால் சிறிய அளவிலான உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே அதுகுறித்து நோயாளிகள் மத்தியில் விளக்குவது ஒவ்வொரு சித்தா டாக்டருக்கும் கடமையாகும்.
இந்த நோக்கத்திற்காக இந்த நிகழ்ச்சி ஒரு வாரம் கடைபிடிக்கப்படுகிறது, என்றார். ஊர்வலம் நூற்றாண்டு மண்டப சாலை, வஉசி மைதானம் பின்பக்க சாலை, தெற்கு பஜார் வரை சென்று மீண்டும் கல்லூரியை அடைந்தது. ஒருங்கிணைப்பாளர் சுல்பின் நிஹார், இளநிலை ஆராய்ச்சியாளர் கவிதா ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.