சித்தராமையா-டி.கே.சிவகுமார் இடையே மோதல் எதிரொலி; கர்நாடகாவில் பாஜ ஆட்சியை பிடிக்கிறதா?: ஒன்றிய அமைச்சர் விளக்கம்
பெங்களூரு: கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. துணை முதல்வராகவும், கர்நாடகா காங்கிரஸ் தலைவராகவும் டி.கே.சிவக்குமார் உள்ளார். இரண்டரை ஆண்டு காலம் சித்தராமையா முதல்வராக தொடர்ந்து வருகிறார். இந்நிலையில்தான் அடுத்த இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவியை டி.கே.சிவக்குமாருக்கு வழங்க வேண்டும் என அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். டெல்லியில் முகாமிட்டு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்து பேசியுள்ளனர். தற்போது, மல்லிகார்ஜூன கார்கே பெங்களூர் வந்துள்ளார். அவரை முதல்வர் சித்தராமையா நேற்று சந்தித்து பேசினார். இன்று டி.கே.சிவக்குமார் சந்தித்து பேச உள்ளார்.
இதனால் கர்நாடகாவில் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையேதான் பாஜவை சேர்ந்த கர்நாடகாவின் பெலகாவி மக்களவை தொகுதி பாஜ எம்பி ஜெகதீஷ் ஷெட்டர் அளித்த பேட்டியில், மகாராஷ்டிராவின் ஏக்நாத் ஷிண்டே போல் கர்நாடகாவில் முதல்வர் உருவாகிறார்’ என்று கூறினார். இதனால் கர்நாடகாவில் பாஜ ஆட்சியை கைப்பற்ற திட்டமிட்டு காய் நகர்த்துகிறதா? என்ற கேள்வி எழுந்தது. இதுதொடர்பாக ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி விளக்கம் அளித்துள்ளார். இவர், கர்நாடகாவின் உப்பள்ளி - தார்வார் மக்களவை தொகுதியின் எம்பியாக இருக்கிறார். அவர் கூறுகையில், ‘கர்நாடகாவில் காங்கிரஸ், தனது பதவிக்காலத்தை முழுமையாக முடிக்க வேண்டும். ஏனென்றால் மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு முழு மெஜாரிட்டி கொடுத்துள்ளனர்.
எந்த சூழலிலும் கர்நாடகாவில் பாஜ ஆட்சியை பிடிக்கும் சாத்தியக்கூறு இல்லை. மகாராஷ்டிராவில் நடந்த விஷயம் வேறு. அங்கு கடந்த 2020ம் ஆண்டில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் சிவசேனா சென்றது. அப்போது பாஜ தான் தனிப்பெரும் கட்சியாக இருந்தது. பிறகு 2022ல் ஏக்நாத் ஷிண்டே எங்களுடன் வந்தார். முதல்வராக நியமிக்கப்பட்டார். ஆனால் கர்நாடகாவில் அப்படியான நிலை இல்லை. நாங்கள் எதிர்க்கட்சியாகவே செயல்படும் நிலைப்பாட்டில் இருக்கிறோம். சட்டம் - ஒழுங்கு, நிர்வாகம் முற்றிலுமாக சீர்க்குலைந்துள்ளது. விவசாயிகளும், மக்களும் நெருக்கடியில் தவிக்கின்றனர். ஆனால் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் டெல்லிக்கு பயணம் செய்கிறார்கள். மறுபுறம் துணை முதல்வர் டி.கே.சிவகுமார், சிறையில் உள்ள எம்எல்ஏக்களையும் சந்திக்கிறார். இப்போது அனைத்து எம்எல்ஏக்களையும் அவர் ஏன் நினைவில் கொள்கிறார் என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்’
என்றார்.
அமித்ஷாவுடன் தொடர்பில் இருக்கிறாரா டி.கே.சிவகுமார்?
அமித்ஷாவுடன் டி.கே.சிவகுமார் தொடர்பில் இருப்பதாக தகவல் பரவியது. இது கர்நாடக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த தகவலை டி.கே.சிவகுமார் திட்டவட்டமாக மறுத்தார். இந்த குற்றச்சாட்டை நிரூபித்தால், தான் அரசியலை விட்டு விலக தயார் எனவும் அவர் சவால் விடுத்துள்ளார்.