சித்தராமையா, டி.கே.சிவகுமாரை டெல்லிக்கு அழைத்து பேசி முடிவெடுப்போம்: மல்லிகார்ஜுன கார்கே தகவல்
பெங்களூரு: மாநிலத்தில் நிலவும் அதிகாரப் போட்டி விவகாரத்தில் சித்தராமையா, டி.கே.சிவகுமார் ஆகியோரை டெல்லிக்கு அழைத்து பேசி முடிவெடுக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் மல்லிகார்ஜுன கார்கே நிருபர்களிடம் கூறியதாவது:
நான் டெல்லி சென்றதும் முக்கியமான தலைவர்களை அழைத்து பேசுவேன். முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோரும் டெல்லிக்கு அழைக்கப்படுவார்கள். அவர்களை அழைத்து முக்கியமான மேலிடத் தலைவர்களையும் வைத்து பேசி தீர்வு காணப்படும். ராகுல் காந்தி, சித்தராமையா, டி.கே.சிவகுமார் மற்றும் மற்ற முக்கியமான தலைவர்களுடன் இதுதொடர்பாக விரிவாக விவாதித்து, பின்னர் இவ்விவகாரத்தில் அடுத்தகட்டமாக என்ன செய்வதென்று முடிவெடுக்கப்படும். கட்சி மேலிடம் என்பது தனிநபர் அல்ல; அதுவொரு குழு. எனவே கட்சியின் உயர் கட்டளை தான் முடிவை எடுக்கும்’ என்று கூறினார்.
சொன்னதை காப்பாற்றுங்கள்
அதிகாரப் பகிர்வு குறித்து 5-6 பேருக்கு மட்டுமே தெரியும் என்றும், அதுவொரு ரகசிய ஒப்பந்தம் என்றும் அதன்படி அனைவரும் மனசாட்சிப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று ஏற்கனவே கூறியிருந்த டி.கே.சிவகுமார், சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டும் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எக்ஸ் தளத்தில் டி.கே.சிவகுமார் பதிவு செய்துள்ள போஸ்டரில், ‘சொல் சக்தியே உலகின் சக்தி. சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதே உலகின் மிகப்பெரிய சக்தி. நீதிபதி, ஜனாதிபதி அல்லது நான் உட்பட எந்த சாதாரண மனிதர் என யாராக இருந்தாலும், சொன்ன சொல்படி நடக்க வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார். இந்த போஸ்டர் பெரும் பரபரப்பை எழுப்பியுள்ளது. ஆனால் இந்த போஸ்டரை நான் வெளியிடவில்லை என்று டி.ேக.சிவகுமார் மறுத்துள்ளார்.
சித்தராமையா பதிலடி
டி.கே.சிவகுமாருக்கு பதிலடி கொடுத்து கர்நாடக முதல்வர் சித்தராமையா பதிவிட்டுள்ள போஸ்டரில், கர்நாடகாவுக்கு நாங்கள் அளித்த வார்த்தை (வாக்குறுதி) வெறும் முழக்கம் அல்ல; அதுதான் எங்கள் உலகம் என்று பதிவிட்டுள்ளார். ஆனால், டி.கே.சிவகுமாருக்கான இந்த பதிலடியை மழுப்பும் விதமாக அந்த போஸ்டருக்கு மேல், சக்தி திட்டத்தின் கீழ் பெண்கள் 608 கோடி இலவச பயணங்களை மேற்கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
‘இருவரும் டெல்லி செல்வோம்’
சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் டெல்லிக்கு அழைக்கப்படுவார்கள் என்று மல்லிகார்ஜுன கார்கே பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த டி.கே.சிவகுமார், இதுவரை என்னை யாரும் டெல்லிக்கு அழைக்கவில்லை. ஒருவேளை அழைத்தால் நானும் முதல்வரும் டெல்லி செல்வோம். நாங்கள் இருவரும் கலந்து பேசிவிட்டு டெல்லி செல்வோம் என்று தெரிவித்தார்.