காட்டு யானைகளால் மூணாறு மக்கள் பீதி; படையப்பாவை தொடர்ந்து பாடாய்படுத்தும் ‘கணேசன்’
நேற்று முன்தினம் அருவிக்காடு எஸ்டேட் பகுதிக்குள் நுழைந்த படையப்பா யானை, குடியிருப்பு பகுதிக்கு அருகே உள்ள உள்ள வாழை, பீன்ஸ் உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்தது. தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில், தொடர்ந்து படையப்பா யானையின் நடமாட்டம் உள்ளதால் தொழிலாளர்கள், பொதுமக்களிடையே அச்சம் அதிகரித்துள்ளது. பலமுறை படையப்பா யானையை, பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டினாலும், தொடர்ந்து குடியிருப்பு பகுதி மற்றும் சாலையோரங்களில் சுற்றி திரிவதை படையப்பா யானை வழக்கமாக கொண்டுள்ளது.
தற்போது மழைக்காலம் என்பதால் காடுகளில் யானைக்கு ஏற்ற தீவனம் அதிகமாக உள்ள நிலையிலும் வனப்பகுதிக்குச் செல்லாமல் தொடர்ந்து அடம்பிடித்து வருகிறது.அதேபோன்று கணேசன் என்று அழைக்கப்படும் ஆண் ஒற்றை காட்டு யானை சிவன்மலை, ஒத்தபாறை, லட்சுமி எஸ்டேட் பகுதிகளில் சுற்றி வருகிறது. இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள், குடியிருப்புவாசிகள் நிம்மதியிழந்துள்ளனர்.