பொதுமக்களின் வாக்குகளை தேர்தல் ஆணையம் திருடுகிறது என்பதற்கு தங்களிடம் ஆதாரம் உள்ளது: ராகுல் காந்தி பேட்டி
டெல்லி: பொதுமக்களின் வாக்குகளை தேர்தல் ஆணையம் திருடுகிறது என்பதற்கு தங்களிடம் ஆதாரம் உள்ளது என மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பிகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் மூலமாக பல லட்சம் வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்க தேர்தல் ஆணையம் முயற்சிக்கிறது என காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
நாடாளுமன்ற இரு அவைகளிலும் இது குறித்தான விவாதங்களை நடத்தக்கோரி எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தியும் வருகின்றனர். இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராகுல் காந்திகூறுகையில், வாக்காளர்களின் வாக்குரிமையை பறிக்கும் வேலையில் தேர்தல் ஆணையத்தில் யார் ஈடுபட்டாலும் தப்ப விட மாட்டோம்.
பொதுமக்களின் வாக்குகளை தேர்தல் ஆணையம் திருடுகிறது என்பதற்கு தங்களிடம் ஆதாரம் உள்ளது. மக்களின் வாக்குகளை திருடுவது இந்தியாவுக்கு எதிரான செயல், தேசத்துரோக செயலுக்கு ஈடானது. பொதுமக்களின் வாக்குளை திருடியவர்கள் எங்கிருந்தாலும் சரி பணி ஓய்வுபெற்றுவிட்டாலும் நாங்கள் விடமாட்டோம். வாக்காளர் பட்டியல் திருத்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என சபாநாயகரிடம் விடுத்த பின் ராகுல் பேட்டி அளித்தார்.