உத்தரபிரதேச மாநிலத்தில் ‘நீண்டகால முதல்வர்’ சாதனை படைத்த யோகி ஆதித்யநாத்
கடந்த 2017ம் ஆண்டில் நடந்த உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில், பாஜகவின் மிக முக்கிய மற்றும் செல்வாக்கு மிக்க முகங்களில் ஒருவராகத் திகழ்ந்தார். இந்தத் தேர்தலில் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்றதைத் தொடர்ந்து, மார்ச் 19, 2017 அன்று உத்தரப் பிரதேச முதல்வராக பதவியேற்றார். தொடர்ந்து 2022 சட்டமன்றத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெற்றதைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக முதலமைச்சரானார். இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தின் மிக நீண்ட காலம் முதல்வர் பதவியில் நீடிக்கும் முதல் தலைவர் என்ற புதிய சாதனையை யோகி ஆதித்யநாத் படைத்துள்ளார்.
அம்மாநிலத்தின் முதல் முதல்வராக இருந்த பண்டிட் கோவிந்த் பல்லப் பந்த்தின் சாதனையை தற்போது அவர் முறியடித்துள்ளார். யோகி ஆதித்யநாத் இதுவரை 8 ஆண்டுகள் மற்றும் 132 நாட்கள் பதவிக்காலத்தை நிறைவு செய்துள்ளார். முன்னாள் முதல்வர் பண்டிட் கோவிந்த் பல்லப் பந்த்தின் மொத்தப் பதவிக்காலம் 8 ஆண்டுகள் மற்றும் 127 நாட்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.