பாமக சின்னம், கொடியை பயன்படுத்துவது சட்டவிரோதம்; அன்புமணி நடைபயணத்துக்கு தடை விதிக்க வேண்டும்: டிஜிபியிடம் ராமதாஸ் மனு
இதற்கிடையே அன்புமணி தன்னுடைய பெயரை பயன்படுத்த கூடாது என ராமதாஸ் தடாலடியாக அறிவித்திருந்தார். ஆனால், அன்புமணி தொடர்ந்து தனது பெயருடன் ராமதாஸ் பெயரை பயன்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி பூம்புகாரில் நடக்க உள்ள மகளிர் மாநாட்டுக்கான வேலைகளில் ராமதாஸ் தீவிரம் காட்டி வருகிறார். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தொண்டர்களை தைலாபுரம் தோட்டத்திற்கு வரவழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தி அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். ராமதாசுக்கு போட்டியாக ஆதரவை திரட்ட பாமக செயல் தலைவர் அன்புமணி இன்று (25ம் ேததி) முதல் நவம்பர் 1ம் தேதி வரை தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொள்ளவுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் இன்று தொடங்கும் இந்த பயணம் தர்மபுரியில் நிறைவடையவுள்ளது.அன்புமணி மேற்கொள்ளும் இந்த பயணத்திற்காக ‘உரிமை மீட்க... தலைமுறை காக்க’ என்ற இலட்சினை தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த இலட்சினையை அன்புமணி நேற்றுமுன்தினம் வெளியிட்டார். பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கட்சிக்கார்கள் தீவிரமாக செய்து வருகின்றனர். இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலிடம் நேற்று ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:
பாமகவின் நிறுவனராகவும், தலைவராகவும் நானே செயல்பட்டு வருகிறேன். எனவே அன்புமணி தரப்பினர் பாமக கொடி, மற்றும் சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். அவர் அதை பயன்படுத்துவது சட்டவிரோதம். எனது அனுமதி இல்லாமல் அன்புமணி நடைபயண அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனால் வடதமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும். எனவே, அவரது சுற்றுப்பயணத்தையும் தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளார்.
அன்புமணிக்கு எதிராக டிஜிபியிடம் ராமதாஸ் அளித்துள்ள இந்த புகாரால் பாமகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், ‘பொதுக்குழுவால் பாமகவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எனக்கு கட்சியின் சின்னம் மற்றும் கொடியை பயன்படுத்த உரிமை உண்டு. அதை யாரும் தடுக்க முடியாது’ என கூறி உள்ள அன்புமணி தரப்பினர், இன்று நடைபெற உள்ள நடைபயணத்தில் கட்சி சின்னம், கொடியை பயன்படுத்துவோம் என்று தெரிவித்து உள்ளனர்.