அமெரிக்க அதிபரைக் கண்டு பிரதமர் மோடிக்கு ஏன் இவ்வளவு பயம்?”: கல்யாண் பானர்ஜி
டெல்லி: அமெரிக்க அதிபரைக் கண்டு பிரதமர் மோடிக்கு ஏன் இவ்வளவு பயம்?” என மக்களவையில் திரிணாமுல் எம்.பி கல்யாண் பானர்ஜி பேசியுள்ளார். பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் ஆகிய பிரச்சினைகள் குறித்து பாராளுமன்றத்தில் விவாதத்தை தொடங்க இருப்பதாக ஆளும் கட்சி தெரிவித்திருந்தது. அதன்படி மக்களவையில் நேற்று விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.
இந்த நிலையில் இதற்கு பதில் தெரிவிக்கும் விதமாக பல்வேறு அரசியல் கட்சியினர் கேள்வி எழுப்பினர். அந்த வகையில், பஹல்காம் தாக்குதலுக்கு பிரதமரும் உள்துறை அமைச்சரும் பொறுப்பேற்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி கல்யாண் பானர்ஜி தெரிவித்தார். 4 பயங்கரவாதிகள் இந்தியாவில் நுழைந்து, துப்பாக்கிச் சூடு நடத்தி அப்பாவி மக்களை கொன்றுவிட்டு எவ்வித பயமும் இல்லாமல் அங்கிருந்து வெளியேறினர். அப்போது CISF, PSF மற்றும் நமது நாட்டின் பாதுகாப்பு எங்கே இருந்தது? என கேள்வி எழுப்பினார்.
மேலும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய மக்கள் அனைவரும் உங்களுடன் ஒற்றுமையுடன் நின்றனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இறுதியாக மீட்கப்படும் என்றும் நாங்கள் நம்பினோம். ஆனால், நீங்கள் பாதியிலேயே சண்டையை நிறுத்திவிட்டீர்கள். ஆபரேஷன் சிந்தூர் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் சொன்னது தவறான தகவல் என்று X தளத்தில் பதிவிடக்கூட பிரதமர் மோடியால் ஏன் முடியவில்லை?. நீங்கள் இப்படி சொல்லக்கூடாது என டிரம்பிடம் மோடி ஏன் கேட்கவில்லை. ட்ரம்ப் முன்பு நின்றதும் பிரதமர் மோடியின் 56 இன்ச் மார்பு 36 இன்ச்சாக சுருங்கி விடுகிறது. உயரம் 5 அடியாக குறைந்து விடுகிறது. ஏன் இவ்வளவு பயம்?” இவ்வாறு தெரிவித்தார்.