உடுமலை திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு; பக்தர்களுக்கு தடை
இங்கு, பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணியர் மற்றும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், இன்று ஆடிப்பெருக்கு வழிபாடு செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் காலை முதலே திருமூர்த்திமலைக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தும், அருவியில் நீராடியும் மகிழ்ந்தனர்.
மதியம் அருவிக்கு மேல் மலைப்பகுதியில் மழை பொழிவு உள்ளதாக வந்த தகவலையடுத்து, முன்னெச்சரிக்கையாக அருவி மற்றும் கோவில்பகுதியில் இருந்து பக்தர்கள் வெளியேற்றபட்டனர். அதன்பின்பு மாலையில், பஞ்சலிங்க அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் காட்டாற்று வெள்ளம் கோவில் வளாகத்தை சூழ்ந்துள்ளதால், கோவில் நடை அடைக்கப்பட்டது. தொடர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.