புதுப்பிக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று இரவு திறந்து வைக்கிறார்: ரூ.4500 கோடியில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்
* நாளை கங்கைகொண்ட சோழபுரம் திருவாதிரை விழாவில் பங்கேற்பு
தூத்துக்குடி: இரண்டு நாள் பயணமாக இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடி, புதுப்பிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைக்கிறார். பின்னர், திருச்சி சென்று தங்கும் பிரதமர், நாளை அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் நடக்கும் ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்கிறார். இதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தென்மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் சர்வதேச தரத்துக்கு இணையாக ரூ.381 கோடி செலவில் தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதை இன்று இரவு 8.30 மணிக்கு பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இதற்காக மாலத்தீவிலிருந்து தனி விமானத்தில் தூத்துக்குடி விமான நிலையத்தில் வந்திறங்கும் பிரதமர் மோடி விமான நிலையத்தை திறந்து வைத்து அங்கு உருவாக்கப்பட்டுள்ள வசதிகளை பார்வையிடுகிறார். பின்னர் விமான நிலையத்தின் முன்புறம் அமைக்கப்பட்டுள்ள விழா பந்தலில், ரூ.4,500 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைப்பதோடு, புதிய திட்டப்பணிகளுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
இதையொட்டி பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை பிரிவான ‘எஸ்பிஜி’ குழுவின் ஏடிஜிபி சுரேஷ்குமார் தலைமையில் சுமார் 80 பேர் விமான நிலைய பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தமிழக ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் சுமார் 2100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விழா நடக்கும் பகுதி மற்றும் விமான நிலையத்துக்கு மொத்தம் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விழா முடிந்ததும், அங்கிருந்து விமானத்தில் புறப்பட்டு இரவு 10.35 மணியளவில் திருச்சி விமான நிலையத்துக்கு பிரதமர் மோடி வந்தடைகிறார். தொடர்ந்து, சாலை மார்க்கமாக செல்லும் அவர், மத்திய பேருந்து நிலையம் அருகே ராஜா காலனி கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் இரவு தங்கி ஓய்வெடுக்கிறார். நாளை காலை 11 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு 12 மணியளவில் அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரத்திற்கு வருகிறார். அங்கு ஹெலிபேடிலிருந்து கோயில் வரை 700 மீட்டர் தூரம் ‘ரோடு ஷோ’ நடைபெறுகிறது.
இதில் பிரதமர் மோடி மக்களை சந்திக்கிறார். கங்கைகொண்ட சோழபுரம் கோயிலுக்கு பிரதமர் மோடி வாரணாசியிலிருந்து கங்கை நீருடன் வருவதாக தெரிகிறது. சாமி தரிசனம் செய்யும் பிரதமர் மோடி, பின்னர் 3 நிமிடம் கோயிலில் அமர்ந்து தியானம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து கோயில் சிற்பங்களையும், தொல்லியல் துறை சார்பில் அமைக்கப்படும் புகைப்பட கண்காட்சியையும் பார்வையிடுகிறார். தொடர்ந்து, அங்கு நடைபெறும் ஆடி திருவாதிரை விழாவில், ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிடுகிறார்.
பின்னர் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இசை நிகழ்ச்சியை கண்டுகளிக்கும் பிரதமர், மதியம் ஹெலிகாப்டரில் புறப்பட்டு திருச்சிக்கு செல்கிறார். அங்கிருந்து 2.30 மணியளவில் சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு புறப்படுகிறார். மோடி வருகையையொட்டி திருச்சி விமான நிலையத்தில் திருச்சி மாநகர போலீசார், ஆயுதப்படை போலீசார், மத்திய தொழிலக பாதுகாப்பு படை போலீசார், அதிரடிப்படை போலீசார் மற்றும் ஒன்றிய அரசின் சிறப்பு பாதுகாப்பு குழுவான எஸ்.பி.ஜி. குழுவினர் என 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
டெல்லியில் இருந்து வந்துள்ள எஸ்.பி.ஜி. அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரடியாக கண்காணித்து வருகிறார்கள். திருச்சி ஓட்டல் அருகிலும் 100 மீட்டர் சுற்றளவுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பிரதமரின் வருகையை முன்னிட்டு 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருச்சியில் முதல் முறையாக பிரதமர் மோடி தங்குவதால் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று மாலை ஓட்டலில் இருந்து திருச்சி விமானம் நிலையம் வரை பிரதமரின் கான்வாய் ஒத்திகை நடத்தப்பட்டது.
மேலும், ராணுவத்துக்கு சொந்தமான விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்தில் ஒத்திகை நடந்தது. சிறப்பு விமானம் இயக்கப்பட்டு ஒத்திகை பார்க்கப்பட்டது. 3 ராணுவ ஹெலிகாப்டரும் திருச்சியில் தயாராக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டர், திருச்சி விமான நிலையத்திலிருந்து பிரதமர் செல்ல உள்ள அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் வரை இயக்கப்பட்டு ஒத்திகை பார்க்கப்பட்டது. முன்னெச்சரிக்கையாக வானிலை மாற்றம், அதிக காற்று உள்ளிட்ட பிரச்னைகள் ஏதேனும் இருந்தால் சாலை மார்க்கமாக செல்லவும் கார் மூலம் ஒத்திகை நடத்தப்பட்டுள்ளது.
* பிரதமர் மோடி, ஓபிஎஸ்சை சந்திக்க எடப்பாடி எதிர்ப்பு: திருச்சியில் தனியாக சந்தித்து பேசுகிறார்
எடப்பாடி பழனிசாமியை பல்வேறு வகையில் மிரட்டி பாஜ-அதிமுக கூட்டணியை உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி செய்து அறிவித்தார். அதன்பின் தமிழ்நாட்டில் தேஜ கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று அமித்ஷா கூறினார். இதற்கு எடப்பாடி மறுப்பு தெரிவித்த பிறகும் மீண்டும் மீண்டும் அவர் கூட்டணி ஆட்சிதான் என்று கூறினார். ஒரு கட்டத்தில் கோபம் அடைந்த எடப்பாடி, கூட்டணி ஆட்சி அமைக்க நாங்கள் ஏமாளிகளா, எங்களுக்கு கூட்டணி முக்கியமில்லை, தனித்துதான் ஆட்சி அமைப்போம் என்றார்.
இந்நிலையில், ஓபிஎஸ், டிடிவி.தினகரன் ஆகியோரையும் கூட்டணியில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்தார். ஒன்றிய இணை அமைச்சர் முருகன், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோரும் கூட்டணி ஆட்சி என்றே கூறுவதால் இதுகுறித்து தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் மோடியிடம் புகார் செய்ய எடப்பாடி திட்டமிட்டுள்ளார். அதேசமயம் பாஜ கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சியினரும் தங்கள் நிலை குறித்து பேச முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், ஜி.கே.வாசன் உள்ளிட்ட சிறிய கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் அனுமதி கேட்டுள்ளனர். இந்த தகவல் எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரிந்தவுடன், ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரை மட்டும் சந்திக்க பிரதமர் மோடி நேரம் ஒதுக்கக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பிரதமர் அலுவலகத்துக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனால் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் சந்திக்க அனுமதி அளித்துள்ளனர். ஆனால் நாளை, தூத்துக்குடி விமானநிலையத்தில் சந்திக்க ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் மற்றும் சிறிய கட்சிகளின் தலைவர்களுக்கு அனுமதி அளிக்க பிரதமர் அலுவலகம் முடிவு செய்திருந்தது. இதனால் தற்போது ஜி.கே.வாசன் உள்ளிட்ட சிறிய கட்சிகளின் தலைவர்கள் தூத்துக்குடியில் சந்திக்க பிரதமர் அலுவலகம் அனுமதி அளித்துள்ளது.
ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோருக்கு அனுமதி அளிக்கவில்லை. ஆனால் கடைசி நேரத்தில் பிரதமர் அனுமதி அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கூட்டணியில் இல்லாதவர்களுக்கு சந்திக்க அனுமதிப்பதன் மூலம் கூட்டணியில் தேவையில்லாத குழப்பம் ஏற்படும் என்று எடப்பாடி பழனிசாமி கருதுகிறார்.
அவர்களும் நாங்கள் பாஜவுடன் கூட்டணி என்று கூறுவார்கள். தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்று இருக்கும்போது அவர்கள் தனி அணியாக இருப்பது எப்படி என்றும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் அவர்கள் இருவரும் சந்திக்க அனுமதி அளிப்பதில் பிரதமர் அலுவலகம் கடுமையான குழப்பத்தில் உள்ளது. இதனால் அதிமுக கூட்டணியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.