ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் எஞ்சின் சோதனை ஓட்டம் வெற்றி: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்!
டெல்லி: ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் எஞ்சின் சோதனை ஓட்டம் வெற்றி என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப். ஆலையில் 175 வகைகளில், 600 வடிவமைப்புகளில் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில், 1200 குதிரைத் திறன் கொண்ட முதல் ஹைட்ரஜன் ரயிலை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது பணிகள் அனைத்து நிறைவடைந்து உள்ளன. பழைய ரயில் எஞ்சின்கள் நீக்கப்பட்டு புதிய ஹைட்ரஜன் ரயில் எஞ்சின்கள் பல வழித்தடங்களில் அறிமுகப்படுத்தப்படும்.
இந்நிலையில், சென்னை ஐ.சி.எப். தொழிற்சாலையில் ஹைட்ரஜன் எஞ்சின் முதல் சோதனை ஓட்டம் நடைபெற்றது. ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் வெற்றி அடைந்தது என அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மேலும் அவர், ''கார்பன் வெளியேற்றத்தை குறைத்து சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக ஹைட்ரஜன் ரயில்கள் இருக்கும். 1200 குதிரைத் திறன் கொண்ட ஹைட்ரஜன் ரயிலை இந்தியா உருவாக்கி வருகிறது. ஹைட்ரஜன் ரயில் தொழில்நுட்பம் இந்தியாவை முன்னணி நாடுகளில் ஒன்றாக மாற்றும்'' என்றார்.