திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ரயிலில் இருந்து விழுந்த பெண் உயிரிழப்பு
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் அவரது மனைவி ரோகிணி. இந்த தம்பதிக்கு இரண்டு வயதில் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ராஜேஷ்-ன் தந்தை சென்னையில் வசித்து வருகிறார். அவரை பார்ப்பதற்காக கணவன் மனைவி இருவரும் திருவனந்தபுரம் விரைவு ரயில் சென்னை நோக்கி வந்துகொண்டிருந்தனர்.
அப்போது ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே வந்தபோது கழிவறைக்கு சென்ற மனைவி வெகுநேரம் ஆகியும் திரும்பி வராததால் கணவன் ராஜேஷ் காட்பாடி ரயில்வே காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் காட்பாடி மற்றும் ஜோலார் பேட்டை ரயில்வே போலீசார் ரோகிணியை தேடிவந்தனர். இந்த நிலையில் வாணியம்பாடியை அடுத்த புத்துகோயில் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் ரோகிணியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
தொடர்ந்து ஜோலார்பேட்டை காவல்துறையினர் ரோகிணியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.