திருச்செந்தூர் அருகே 500 ஏக்கரில் 9 மணி நேரம் எரிந்த தீயால் ரூ.50 லட்சம் மரங்கள் நாசம்
திருச்செந்தூர் : திருச்செந்தூர் அருகே 500 ஏக்கர் விவசாய நிலத்தில் தொடர்ந்து 9 மணி நேரம் பற்றி எரிந்த தீயால் ரூ.50 லட்சம் மதிப்பிலான வாழை, தென்னை, முருங்கை, பனை மரங்கள் கருகி நாசமாகின. இதனால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், மேல திருச்செந்தூர் பஞ்சாயத்தில் காயாமொழி, நடுநாலுமூலைகிணறு, தளவாய்புரம், புதூர் ஆகிய கிராமங்கள் இடம் பெற்றுள்ளன. இக்கிராமங்களில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் சொட்டுநீர் பாசனம் மூலம் வாழை, தென்னை, முருங்கை விவசாயம் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணியளவில் தளவாய்புரம் - காயாமொழி சாலையோரத்தில் உள்ள தென்னை மரங்களில் தாழ்வாக சென்ற மின்கம்பிகள் உரசியதில் தீப்பிடித்தது. அப்போது காற்றின் வேகம் காரணமாக தீயானது அடுத்தடுத்த தோட்டங்களில் பரவியது.
இதையடுத்து, திருச்செந்தூர், ஏரல் தீயணைப்புத் துறையினர் தீயணைப்பு வாகனம் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் பொத்தகாலன்விளையை சேர்ந்த மங்கள சேவியருக்கு (53) சொந்தமான 15 ஏக்கர் பரப்பளவில் 17 ஆயிரம் வாழைகளும், தளவாய்புரம்-நடுநாலுமூலைக்கிணறு செல்லும் சாலை ஓரத்தில் 40 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட முருங்கை மரங்களும் தீயில் கருகியது.
அதேபோல் தளவாய்புரம் ஆதிஜெகுரு (65) தோட்டத்தில் உள்ள ஆயிரம் தென்னை மரங்கள் தீயில் கருகியது. அதேபோல் நடுநாலுமூலைகிணறு சந்தியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அதிசய கணபதி (41). இவர் 6 ஏக்கர் பரப்பளவில் பயிரிட்ட 7500 வாழை மரங்கள் தீயில் கருகியது. இந்த தீ விபத்தில் 500 ஏக்கர் பரப்பளவிலான 20 தோட்டங்களில் 30 ஆயிரம் வாழை மரங்கள், 5 ஆயிரம் தென்னை, 6 ஆயிரம் முருங்கை, 2 ஆயிரம் பனை மரங்கள், சொட்டுநீர் பாசன பைப்புகள் தீயில் கருகி நாசமாகின.
தகவலறிந்து விரைந்து வந்த திருச்செந்தூர், ஏரல் தீயணைப்புத் துறையினர் இரவு 11 மணி வரை சுமார் 9 மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை அணைத்தனர். சம்பவ இடத்திற்கு திருச்செந்தூர் தாசில்தார் பாலசுந்தரம் நேரில் வந்து பார்வையிட்டார். பாதிப்பு குறித்து வருவாய்த்துறையினர் கணக்கெடுத்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக காயாமொழி தளவாய்புரம் பகுதியில் அடுத்தடுத்து தீ விபத்து ஏற்பட்டது. தற்போது பெரிய விபத்து ஏற்பட்டு பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. காயாமொழி மின்சார வாரியத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை மற்றும் தாழ்வான நிலையில் செல்லும் மின் கம்பிகளை மாற்றாததால் தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டு வந்ததாகவும், தற்போது பெரிய அளவில் விபத்து ஏற்பட்டு சுமார் ரூ. 50 லட்சம் மதிப்பிலான சேதம் ஏற்பட்டதால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரிசெய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.