தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் உயர்கல்வி உரையாடல்கள் திட்டம்: அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைத்தார்
இத்திட்டத்தின் முதல் நிகழ்வாக, வருங்கால கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் மீது ஜெனரேட்டிவ் ஏஐ (செயற்கை நுண்ணறிவு) ஏற்படுத்தும் தாக்கம் என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கை, தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் சென்னையில் நேற்று நடத்தியது. இதை உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை செயலாளர் சங்கர், கல்லூரி கல்வி ஆணையர் சுந்தரவல்லி, தொழில்நுட்பக் கல்வி ஆணையர் இன்னசென்ட் திவ்யா, தமிழ்நாடு மாநில உயர் கல்வி மன்ற துணைத் தலைவர் விஜயகுமார், துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பலரும் கலந்து கொண்டனர்.
* அரசு தொழில்நுட்ப நிறுவனங்களில் கல்வி பயில மாணவர்கள் ஆர்வம்
நிகழ்ச்சிக்கு பின்னர் அமைச்சர் கோவி. செழியன் கூறுகையில், ‘‘கடந்தாண்டு பொறியியல் மாணவர் சேர்க்கை 2 லட்சத்து 50 ஆயிரத்தை தாண்டவில்லை. ஆனால் இந்த ஆண்டு 3 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளன. அரசு தொழில்நுட்ப நிறுவனங்களில் கல்வி பயில அதிக அளவிலான மாணவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். கடந்த காலங்களில் பெரிய நிறுவனங்களில் மட்டுமே செயற்கை நுண்ணறிவு பாடங்கள் பயிற்றுவிக்கப்பட்டது. தற்போது தமிழ்நாடு அரசு அனைத்து தரப்பு மக்களும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் அரசு கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு பாடங்களை கொண்டு வந்துள்ளது’’ என்றார்.