தமிழ்நாட்டில் 38 மாவட்டத்தில் 17 வகையான மருத்துவ சேவைகள் இலவசமாக கிடைக்கும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்
* காலையில் டெஸ்ட், மாலையில் ரிசல்ட்
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் 17 வகையான சிறப்பு மருத்துவ சேவைகள் இலவசமாக கிடைக்கும் வகையில், ‘நலன் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று தொடங்கி வைக்கிறார். காலையில் எடுக்கப்படும் பரிசோதனைகளுக்கு, மாலையில் ரிசல்ட் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் மாநகராட்சி, ஊரக பகுதிகள், குடிசை பகுதிகள், பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் முன்னுரிமை அடிப்படைப்படையில், ‘‘நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் என்ற திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இந்த மருத்துவ முகாமை, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (2ம் தேதி) சென்னை, மயிலாப்பூர் காமராஜர் சாலையில் உள்ள செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி வைக்கிறார்.
இதுகுறித்து தமிழக அரசின் ஊடக செயலாளர்களான தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராதாகிருஷ்ணன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார், தொழிலாளர் நலத்துறை செயலாளர் வீர ராகவ ராவ், ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளர் லட்சுமி பிரியா ஆகியோர் நேற்று காலை சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தை இன்று காலை 8.45 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு முழுவதும் 1,256 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. அதன்படி சென்னை மாநகராட்சியில் 15 முகாம்களும், ஒரு மாநகராட்சிக்கு 4 முகாம்கள், 10 லட்சத்திற்கும் அதிகம் உள்ள 5 மாநகராட்சிகளில் 20 முகாம்கள், 10 லட்சத்திற்கும் குறைவாக உள்ள 19 மாநகராட்சிகளில் 57 முகாம்கள், நகராட்சி, ஊரக பகுதிகளில் என மொத்தம் 1,256 முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
இந்த மருத்துவ முகாம்களில் 40 வயதிற்கு மேற்பட்டோர் நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இதயநோயாளிகள், மனநல பாதிப்புடையோர், கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், வளர்ச்சி குன்றிய குழந்தைகள், சிறுநீரக செயல்பாடு பரிசோதனை, எக்ஸ்ரே, எக்கோகார்டியோகிராம், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை, காது, மூக்கு தொண்டைக்கான சிகிச்சை, கண் பரிசோதனை உள்ளிட்ட 17 வகையான சிறப்பு மருத்துவ சேவைகளுக்கு பொதுமக்கள் இலவசமாக சிகிச்சை பெறலாம். சமூக-பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு இந்த மருத்துவ முகாம்களில் முன்னுரிமை வழங்கப்படும். இதயம், அறுவை சிகிச்சை, பொது மருத்துவ நிபுணர்கள் முகாம்களில் பங்கேற்கின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 800க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் இதில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரந்தோறும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் நடைபெறும். மருத்துவ முகாம்களில் சோதனை முடிவுகள் அன்று மாலையே அளிக்கப்படும். இது, சுகாதாரத்துறை திட்டமாக இருந்தாலும் அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட உள்ளன. நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளும் பங்கேற்பார்கள். ‘‘உப்பு, சர்க்கரை, எண்ணெயை சற்று குறை’’ என்ற விழிப்புணர்வு நிகழ்வுகளும் முகாம்களில் நடத்தப்படும்.
‘நலன் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தை கண்காணிக்க மாநில அளவில் தலைமை செயலாளர் தலைமையிலும், மாவட்ட அளவில் கலெக்டர்கள் தலைமையிலும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. வாரம்தோறும் இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். முகாம்களுக்கு வரும் கூட்ட நெரிசலை சமாளிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். சென்னை மாநகராட்சியில் 15 முகாம்களும், ஒரு மாநகராட்சிக்கு 4 முகாம்கள், 10 லட்சத்திற்கும் அதிகம் உள்ள 5 மாநகராட்சிகளில் 20 முகாம்கள், 10 லட்சத்திற்கும் குறைவாக உள்ள 19 மாநகராட்சிகளில் 57 முகாம்கள், நகராட்சி, ஊரக பகுதிகளில் என தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 1,256 முகாம்கள் நடத்தப்பட உள்ளது.