மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரத்தில் குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு காலக்கெடு வழங்கியது சரியானது: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல்
புதுடெல்லி: ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர் மூன்று மாதங்களில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்க்கு, சுமார் 14 கேள்விகளுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு விளக்கம் கேட்டு கடிதம் எழுதி அனுப்பி இருந்தார். இது தொடர்பாக அனைத்து மாநிலங்களும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் பி.வில்சன் மற்றும் ஹரீஷ் ஆகியோர் பதில் மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். அதில், ‘‘மசோதாக்களை மீண்டும் சட்ட பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய பிறகு அதற்கு ஒப்புதல் அளித்தாக வேண்டும் என்று அரசியல் சாசன பிரிவு 200 கூறுகிறது.
மசோதாக்களை நிறுத்தி வைக்கும் வகையில் நான்காவதாக முடிவு எடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது என்ற ஒன்றிய அரசின் வாதம் நிராகரிக்கப்பட்டுள்ளது. அப்படி அரசியல் சாசனம் கூறவில்லை என முந்தைய உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தெளிவாக தெரிவித்துள்ளது. அரசியல் சாசனத்தின் படி ஆளுநர் செயல்படாததால் தான் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய பத்து பல்கலைக்கழக மசோதாக்களுக்கு ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டதாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து தீர்ப்பில் தெளிவாக அறிவித்தது. குறிப்பாக கூட்டாட்சி மற்றும் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படையில் ஆளுநரின் தனிப்பட்ட விருப்பத்துக்கு இடம் கிடையாது. அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையின் ஆலோசனையின் படி தான் ஆளுநர் செயல்பட முடியும். இதில் ஒப்புதலுக்காக மசோதா அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் எந்த உரிய விளக்கமும் இல்லாமல் கோப்புகள் அனைத்தும் ஆண்டு கணக்கில் கிடப்பில் போடப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. அவ்வாறு வந்த மசோதா மறு நிறைவேற்றத்துக்காக என புரிந்து கொண்ட அரசு மசோதாவை சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றியது. ஆனால் ஆளுநர் தரப்பு அவ்வாறு கிடையாது என்று மறுப்பது அரசியல் சாசன விதிகளுக்கு எதிரானதாகும். எனவே மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரத்தில் குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர் மூன்று மாதங்களில் ஒப்புதல் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய காலக்கெடு என்பது சரியான ஒன்றாகும். அதில் எந்தவித மாற்றமும் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் அந்த உத்தரவினால் மக்களுக்கான திட்டத்தை காலதாமதம் இல்லாமல் விரைந்து செயல்படுத்த முடியும். மேலும் இந்த விவகாரத்தில் அரசியல் அமைப்பில் இருப்பதை மீண்டும் குடியரசுத் தலைவர் திருப்பி கேட்பது போன்று உள்ளது.
அதனை ஏற்க முடியாது.. எனவே இந்த கோரிக்கை நிலைக்கத்தக்கது இல்லை என்பது மட்டுமில்லாமல் கடிதத்தை பராமரிக்க முடியாத தன்மை உள்ளது. எனவே அதனை குடியரசுத் தலைவருக்கே திருப்பி அனுப்பி வைக்க வேண்டும். அதாவது குடியரசுத் தலைவர் 14 கேள்விகளுக்கு கேட்ட கடிதத்தை அவருக்கு மீண்டும் உச்ச நீதிமன்றம் திருப்பி அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட விவகாரத்தில் கேரளா அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் விளக்க மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், குடியரசுத் தலைவரின் 14 கேள்விகளில் முதல் 11 கேள்விகளுக்கு உச்ச நீதிமன்றம் ஏற்கனவே பதிலளித்துள்ளது. இந்த விவகாரத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யாமல் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் விளக்கம் கேட்பது என்பது அடிப்படையில் ஏற்புடையது கிடையாது.
அரசியல் சாசனப் பிரிவு 200ல் முடிந்த அளவு மிக விரைவில் என்று ஒரு கால நிர்ணயம் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கையில் அரசியல் சாசன பிரிவு 200ஐ தவறாக புரிந்து கொண்டு குடியரசுத் தலைவர் கூறிய விளக்க குறிப்பு என்பது முற்றிலும் தவறானது. அந்த வகையில் இந்த விளக்கம் கேட்ட குறிப்பை நிராகரிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.