தாம்பரம் சானடோரியத்தில் ரூ.110 கோடியில் கட்டப்பட்ட அரசு மருத்துவமனையை ஆக.5ல் முதல்வர் திறந்து வைக்கிறார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தாம்பரம்: தாம்பரம் சானடோரிய வளாகத்தில் ரூ.110 கோடியில் 400 படுக்கை வசதிகளுடன் கட்டப்படும் மாவட்ட தலைமை மருத்துவமனையை ஆகஸ்ட் 5ம்தேதி முதல்வர் திறந்து வைக்கிறார் என ஆய்வுக்கு பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை அரசு மருத்துவமனையை மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தி 2021ம் ஆண்டு அனுமதி வழங்கியதோடு ரூ.110 கோடி நிதி ஒதுக்கியது.
தாம்பரம் சானடோரியம் தேசிய சித்த மருத்துவமனை அருகேயுள்ள அரசு காசநோய் மருத்துவமனை வளாகத்தில் சுகாதார துறைக்கு சொந்தமான இடத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு, மருத்துவமனை கட்டிட பணி கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட்டது. 6 தளங்கள் கொண்ட 400 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுவரும் இந்த மருத்துவமனை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் நேற்று மாலை புதிய மருத்துவமனை கட்டிடத்தை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதையடுத்து நிருபர்களை சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், ”செங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை 110 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 5.38 கோடி ரூபாய் செலவில் மருத்துவ உப கரணங்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
குரோம்பேட்டையில் பல் மருத்துவமனை 7 கோடியே 10 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. குரோம்பேட்டை மருத்துவமனையில் ஒரு கோடி ரூபாய் செலவில் ஆய்வகம் கட்டப்பட்டுள்ளது.இவற்றை வரும் ஆகஸ்ட் 5ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக வந்து திறந்து வைக்கிறார். மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், படுக்கைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நியமிக்கப்படுவார்கள். இவ்வாறு கூறியுள்ளார்.