கல்வராயன்மலை சிறுகலூர் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்: குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்
பச்சைமலை, ஜவ்வாது மலை, சேர்வராயன் மலைகள் ஆகியவற்றுடன் இவை காவிரி ஆற்றின் வடிநிலத்தை பாலாற்றின் வடிநிலத்தில் இருந்து பிரிக்கும் எல்லையாக அமைந்துள்ளன. கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கல்வராயன்மலையில் கவியம், தேம்பாவணி, முட்டல், மேகம், பெரியார் உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளிலும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குளித்து மகிழ்ந்தனர். மலைச்சாலையை ஒட்டி உள்ள பெரியார் நீர்வீழ்ச்சி குறைந்த உயரம் கொண்டது. இதில் மழைக்காலங்களில் மட்டும் தண்ணீர் கொட்டும்.
கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, மற்றும் புதுவை ஆகிய பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் நீர்வீழ்ச்சிகளில் குளித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதே நேரத்தில் கல்வராயன்மலை வட்டம் அத்திக்குளி அருகே சிறுகலூர் நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சி கொல்லிமலையில் உள்ள ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியை போன்று உயரமாக காணப்படுகிறது. இங்கு விடுமுறை நாட்களில் உள்ளூர் மட்டுமின்றி வெளி ஊரிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. கல்வராயன்மலையை சுற்றிப்பார்க்க வருகை புரிந்த சுற்றுலா பயணிகள் சிறுகலூர் நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தனர்.
ஆனால் இங்கு குளிப்பதற்கு தடுப்பு கம்பிகள், மேடை போன்ற எந்த வசதியும் இல்லை. போக்குவரத்து வசதியும் சரியாக இல்லை. பாறை நிறைந்த பாதையில்தான் நடந்து செல்ல வேண்டும். இதுதவிர உடை மாற்றும் அறைகள், சிற்றுண்டி கடைகளும் இல்லை. எனவே தமிழக அரசு கவனிக்கப்படாத நீர்வீழ்ச்சிகளை கண்டறிந்து அவற்றை சுற்றுலா தலமாக மாற்றினால் அரசுக்கு அதிக வருவாய் கிட்டும். போக்குவரத்து வசதியும் செய்து தர வேண்டும். பெரிய சுற்றுலா மையமாக மாற்றித்தர வேண்டும். விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் இதுபோன்ற சுற்றுலா தலங்களுக்கு சென்று பொழுது போக்கி வரலாம். எனவே அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.