ராமதாஸ் கோரிக்கையால் அன்புமணி நடைபயணத்துக்கு தடை? டிஜிபி சங்கர்ஜிவால் உத்தரவு
இதையடுத்து, நேற்று முன்தினம் தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் பாமக கட்சி கொடி, சின்னம், அன்புமணி பயன்படுத்தக் கூடாது என்று தடை விதித்தார். மேலும் அவர் மேற்கொள்ள இருந்த நடைபயணத்துக்கு தடைவிதிக்க வேண்டும் டிஜிபி அலுவலகத்தில் ராமதாஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இது குறித்து மாவட்ட எஸ்.பி, கமிஷனருக்கு தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
பாமக தலைவர் மற்றும் நிறுவனரான ராமதாஸ் அனுமதி இல்லாமல் அன்புமணி நடைபயணத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்று ராமதாஸ் சார்பாக மனு அளிக்கப்பட்டது. மேலும் ராமதாஸ் ஒப்புதல் இல்லாமல் பேரணி, நடைபயணத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. செயல் தலைவர் அன்புமணி தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்துள்ளார். அவரது பேரணியால் இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்படவாய்ப்புள்ளது. இதனையடுத்து அன்புமணி நடைபயணத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.
எனவே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவல் ஆணையர்களும், காவல் கண்காணிப்பாளர்கள் இந்த நடைபயணத்துக்கு அனுமதி வழங்குவது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இதன் மூலம் அன்புமணியின் நடை பயணம் குறித்து மாவட்ட எஸ்பிக்கள் முடிவு எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் அன்புமணியின் நடை பயணத்துக்கு எந்த தடையும் இல்லை என்று டிஜிபி அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.