கவிஞர் ஜீவபாரதி எழுதியுள்ள காலம்தோறும் கம்யூனிஸ்ட்கள் நூல் வெளியீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி
அது வெறும் அலங்காரக் கூற்றல்ல என்பதற்கான சான்றுதான் 1956ம் ஆண்டு நங்கவரத்தில் அவர் நடத்திய போராட்டமும், அதற்கு மக்கள் மத்தியில் கிடைத்த அமோக ஆதரவும். அதே உணர்வோடுதான், பின்னாளில் முதலமைச்சராகப் பதவியேற்ற போது, உழுபவருக்கே நிலம் சொந்தம், நில உச்சவரம்புச் சட்டங்களை நடைமுறைப்படுத்தினார். பொதுவுடைமைக் கருத்தை வெறும் அரசியலாக மட்டுமின்றி, மக்களின் வாழ்க்கையினையே மேம்படுத்துவதற்கான கருவியாக, சட்டத்தின் கூறுகளாக மாற்றிச் செயல்படுத்துவதுதான் அவரது ஆட்சிமுறையாகவே இருந்தது.
குடிசைமாற்று வாரியம், கை ரிக்ஷா ஒழிப்பு உள்ளிட்ட கலைஞர் தலைமையிலான அரசால் கொண்டு வரப்பட்ட திட்டங்களெல்லாம் பொதுவுடைமைச் சிந்தனையின் செயல்வடிவங்களே. அவரது வழியில் தான் நமது திராவிட மாடல் அரசும் தவறாமல் பயணித்து வருகிறது. இடதுசாரி இயக்கங்கள் மீதும், தலைவர்கள் மீதும் கொண்டிருக்கும் பேரன்பும், பெரும் பாசமும் நாடறிந்த ஒன்று. பொதுவுடைமைத் தத்துவத்தை உலகுக்கு தந்த கார்ல் மார்க்ஸ் சிலை சென்னையில் நிறுவப்படும் என்று அறிவித்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
சமத்துவம், சமதர்மத்தின் கம்பீர அடையாளமாக கார்ல் மார்க்ஸின் சிலை சென்னையில் நிமிர்ந்து நிற்க வேண்டும் என்ற எனது ஆவலின் வெளிப்பாடே அது. அதுமட்டுமின்றி, திராவிட மாடல் அரசு ஏழை, எளிய மக்களின் நலன்களுக்காகப் புதிய புதிய திட்டங்களை நாள்தோறும் செயல்படுத்தி வருவதையும் கண்கூடாகப் பார்த்து வருகிறீர்கள். விடியல் பயணம் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கி, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் உள்பட சமூகத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை உறுதி செய்திடும் வகையில், “எல்லார்க்கும் எல்லாம்” என்ற பொதுவுடைமைக் கருத்தியலை நடைமுறை வாழ்வியலாக மாற்றுவதற்கான அத்தனை முயற்சிகளையும் திராவிட மாடல் அரசு எடுத்து வருகிறது என்பதில் எனக்கு பெருமிதம் உண்டு.
இந்திய சமூக அமைப்பைப் பொறுத்தவரை அதிகார விடுதலை மட்டும் போதாது, வர்க்க விடுதலையும், சமூகவிடுதலையும் இணைந்ததாக இருந்தால்தான் அது முழுமையானதாக இருக்கும் என்ற அன்றைய பொதுவுடைமைத் தலைவர்களின் கருத்தும், சமூகநீதி இயக்கமாக வழிவந்த திராவிட இயக்க முன்னோடிகளின் சிந்தனையும் எத்தனை தீர்க்கமானது என்பதை இன்றுவரை அனுபவரீதியாக உணர்ந்து வருகிறோம். அதனால்தான், பொதுவுடைமை இயக்கமும், திராவிட இயக்கமும் இந்த இருபெரும் விடுதலைக்காக இரட்டைக் குழல் துப்பாக்கிளாக இன்றுவரை இயங்கி வருவதையும் நாம் அறிவோம்.
இத்தகைய ஆழமான வரலாற்று உண்மையை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னெடுப்புடன் கவிஞர் ஜீவபாரதி வடித்துள்ள இந்நூல், இந்த மண்ணின் சிந்தனையைச் சிவப்பாக்கிய ‘தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் தோழர் சிங்காரவேலர்’ முதல் ‘மேடைத் தமிழுக்கு மேன்மை சேர்த்த தா.பாண்டியன்’ வரையிலான நூறு கம்யூனிஸ்ட் தலைவர்களின் வாழ்க்கைக் குறிப்புகளை இரு பாகங்களாக இன்றைய தலைமுறைக்கு எடுத்து இயம்புகிறது. இந்த நூல் பொதுவுடைமை இயக்கத்திற்கு மட்டுமின்றி, பொதுச் சமூகத்திற்கும் வழிகாட்டக் கூடிய மிகப்பெரிய ஆவணமாக இருக்கும் என்பதில் அய்யமில்லை. இந்த தருணத்தில், இந்த நூலில் இடம்பெற்றுள்ள பொதுவுடைமை இயக்கம் குறித்த கருத்துகளையும், கம்யூனிஸ்ட் தலைவர்களின் தியாகமிகு வாழ்வு குறித்த தகவல்களையும் இன்றைய தலைமுறையினரும் அறிந்திடும் வகையில், சமூக ஊடகங்கள் மூலம் பரப்பிட ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு வாழ்த்து செய்தியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.