பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளை தத்தெடுக்க ராகுல் காந்தி முடிவு!!
டெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பெற்றோரை இழந்து தவிக்கும் 22க்கும் மேற்பட்ட குழந்தைகளை தத்தெடுக்க போவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார். இந்தியா - பாகிஸ்தான் சண்டையின் போது காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டம் கடும் பாதிப்பை சந்தித்தது. ஆப்ரேஷன் சிந்தூரை தொடர்ந்து பாகிஸ்தான் படைகள் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் நடத்திய தாக்குதலில் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் மட்டும் 13 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் படைகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களை காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தாக்குதலில் இடிந்த வீடுகள், வழிபாட்டு தலங்களையும் ராகுல் காந்தி பார்வையிட்டார். அங்குள்ள பள்ளிக்கு சென்று மாணவர்களோடு உரையாடிய ராகுல் காந்தி;
நான் உங்களைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறேன். உங்கள் சிறிய நண்பர்களை நீங்கள் இழந்துவிட்டீர்கள். அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். இப்போது, நீங்கள் சற்று ஆபத்தையும், பயத்தையும் உணர்கிறீர்கள், ஆனால் கவலைப்பட வேண்டாம், எல்லாம் சாதாரணமாகிவிடும். இதற்கு உங்கள் பதில் மிகவும் கடினமாகப் படிப்பது, கடினமாக விளையாடுவது மற்றும் பள்ளியில் நிறைய நண்பர்களை உருவாக்குவதுதான் என்று கூறினார். கடந்த ஒரு மாதத்தில் ராகுல் காந்தி காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும்.
இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் மோதலில் பெற்றோரை இழந்த 22க்கும் மேற்பட்ட குழந்தைகளை ராகுல் காந்தி தத்தெடுக்க முடிவு செய்துள்ளார். பூஞ்ச் பகுதியில், பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோர் இழந்த 22 குழந்தைகளின் கல்விச்செலவை ராகுல் காந்தி ஏற்பார் என்று ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா தெரிவித்தார். மேலும், குழந்தைகள் தங்கள் படிப்பைத் தொடர ஏதுவாக, உதவித் தொகைக்கான முதல் தவணை நாளை வழங்கப்படும் என்றும், இந்தக் குழந்தைகள் பட்டப்படிப்பை முடிக்கும் வரை உதவி தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.