ஓவல் டெஸ்ட்டில் சரிவில் இருந்து மீள போராடும் இந்தியா; ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் காயம்: இங்கிலாந்து அணிக்கு பின்னடைவு
முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 64 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 204 ரன் எடுத்திருந்தது. கருண் நாயர் 52, வாஷிங்டன் சுந்தர் 19 ரன்னுடன் இன்று 2வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். நேற்று இங்கிலாந்து எக்ஸ்டிராவாக மட்டும் 30 ரன்களை வாரி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் கிறிஸ்வோக்ஸ் மிட்-ஆஃப்பிலிருந்து பவுண்டரி நோக்கி சென்ற பந்தை பிடிக்க துரத்தியபோது, சறுக்கி விழுந்ததில் இடது கை தோள் பட்டையில் காயம் அடைந்தார். இதனால் அவர் மைதானதில் இருந்து உடனடியாக வெளியேறினார். நேற்றிரவு அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. காயம் காரணமாக அவர் இந்த டெஸ்ட்டில் இனி பந்துவீச முடியாது என தகவல் வெளியாகி இருக்கிறது. இது இங்கிலாந்து அணிக்கு பின்னடைவாக இருக்கும். நேற்று வோக்ஸ் 14 ஓவர் வீசி, 46 ரன் கொடுத்து ராகுல் விக்கெட்டை வீழ்த்தினார். இந்த தொடரில் அவர் 181 ஓவர்கள் வீசி 11 விக்கெட் வீழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
டாஸில் ராசியில்லாத இந்தியா!
இந்த ஆண்டு ஜனவரியில் ராஜ்கோட்டில் இங்கிலாந்துக்கு எதிராக டி.20யில் இந்தியா டாஸ் வென்ற பின்னர், தொடர்ச்சியாக 15 அனைத்து வடிவ போட்டிகளிலும் டாஸ்களை இழந்துள்ளது. ஆடவர் சர்வதேச போட்டியில் இதற்கு முன் எந்த அணியும் இவ்வாறு டாஸ் இழந்ததில்லை. 1999ல் வெ.இண்டீஸ் தொடர்ச்சியாக 12 முறை டாஸ்களை இழந்திருந்தது. இங்கிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் 5 போட்டிகளிலும் இந்தியா டாஸை இழந்தது. இங்கிலாந்தில் அந்த அணிக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் தொடர்களில் 15 போட்டிகளில் இந்தியா ஒரு முறை மட்டுமே டாஸை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.