ஆபரேஷன் சிந்தூர்’ விவாதத்தால் காங்கிரசில் வெடித்தது உட்கட்சி பூசல்: சசி தரூர், மணீஷ் திவாரி கருத்தால் சலசலப்பு
ஆனால், நாடாளுமன்றத்தில் நேற்று ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதம் நடந்தபோது, காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டிற்காக ஒன்றிய அரசுக்கு எதிராக பேச முடியாது என்று சசி தரூர் மறுத்துவிட்டார். மேலும், தனது முதல் விசுவாசம் நாட்டிற்குத்தான் என்றும், அரசியல் கட்சிகள் நாட்டை மேம்படுத்துவதற்கான கருவி மட்டுமே என்றும் அவர் கூறியிருந்தார். இதனால், நாடாளுமன்ற விவாதத்தில் பேசுபவர்கள் பட்டியலில் இருந்து சசிதரூரின் பெயர் நீக்கப்பட்டது. இதுகுறித்து சசிதரூரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘மவுன விரதம்’ என்று புன்னகையுடன் பதிலளித்துச் சென்றார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், கட்சியின் மற்றொரு மூத்த தலைவரும், ஆனந்த்பூர் சாஹிப் தொகுதி எம்.பி.யுமான மணீஷ் திவாரியின் சமூக வலைதளப் பதிவு, காங்கிரஸ் கட்சியை மேலும் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.
‘ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தில் சசி தரூரும், நானும் பேச ஏன் அனுமதிக்கப்படவில்லை’ என்பது குறித்த செய்தி ஒன்றின் ஸ்க்ரீன்ஷாட்டைப் பகிர்ந்த மணீஷ் திவாரி, அத்துடன் 1970ம் ஆண்டு வெளியான ‘பூரப் அவுர் பச்சிம்’ திரைப்படத்தின் புகழ்பெற்ற தேசபக்திப் பாடலையும் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோ பதிவில், ‘எங்கே அன்பு பேணப்படுகிறதோ, அந்த இடத்தின் பாடலை பாடுகிறேன். நான் இந்தியாவைச் சேர்ந்தவன்; இந்தியாவின் வரலாற்றை கூறுகிறேன். ஜெய் ஹிந்த்’ என்ற அந்தப் பாடல் வரிகள், கட்சியின் நிலைப்பாட்டை விட தேசத்தின் நிலைப்பாடே தங்களுக்கு முக்கியம் என்பதை மறைமுகமாக உணர்த்துவதாக இருந்தது. காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள இந்த குழப்பத்தையும், பிளவையும் பாஜக தனக்குச் சாதகமான அரசியல் வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டுள்ளது.
நாடாளுமன்ற விவாதத்தில் பேசிய பாஜக மூத்த தலைவர் பைஜயந்த் ஜெய் பாண்டா, ‘உங்கள் (காங்கிரஸ்) கட்சியில் நன்றாகப் பேசக்கூடிய பல தலைவர்கள் உள்ளனர். எனது நண்பரும், சிறந்த பேச்சாளருமான சசி தரூரை அவரது கட்சியே பேச அனுமதிக்கவில்லை’ என்று விமர்சித்தார். முக்கிய தலைவர்களையே சொந்தக் கட்சி ஓரங்கட்டுவது, மோடி அரசை எதிர்க்க நினைக்கும் காங்கிரஸுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதுடன், பாஜகவின் கரங்களுக்குப் புதிய அஸ்திரத்தையும் வழங்கியுள்ளதாக அரசியல் பார்வையாளர் கூறுகின்றனர்.