ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து அரும்பாக்கத்தில் விற்பனை; ரவுடி கைது
இதையடுத்து சென்னை அண்ணாநகர் மதுவிலக்கு உதவி ஆணையர் பாலசுப்பிரமணியன் மற்றும் அரும்பாக்கம் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் நேற்று, சென்னை அரும்பாக்கம் பாஞ்சாலி அம்மன் கோயில் அருகே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, கஞ்சா பொட்டலங்களை விற்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர், அரும்பாக்கம் பால விநாயகர் தெருவை சேர்ந்த பிரபல ரவுடி விக்கி (எ) க்ரைம் விக்கி (26) என்பதும், அரும்பாக்கம் காவல் நிலைய சரித்திரபதிவேடு குற்றவாளி என்பதும், கொலை முயற்சி, வழிப்பறி, செல்போன் பறிப்பு, அடிதடி உள்ளிட்ட 7 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. அவரை கைது செய்து போலீசார் விசாரித்தனர். அவர் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:
எனது நண்பர் ஒருவர், எதற்காக அடிதடி மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுகிறார். தற்போது அதில் போதுமான வருமானம் கிடைக்காது. கஞ்சா கடத்தினால்தான் நல்ல வருமானம் கிடைக்கும் என ஆசைவார்த்தை கூறினார். அதாவது, ஒடிசாவில் கஞ்சா விற்பவர்களிடம் கஞ்சா வாங்கி வந்து சென்னையில், அவர்கள் சொல்லும் நபர்களிடம் பத்திரமாக கொடுக்க வேண்டும். கொடுத்ததை உறுதி செய்யும் வகையில் ஒரு குறுஞ்செய்தியுடன் நமது புகைப்படத்தையும் அனுப்பினால் அடுத்த சில நொடிகளில் கூகுள் பே மூலம் நமக்கு ரூ.10 ஆயிரம் பணம் வந்து விடும் என்றார். அதனால் அடிதடி, வழிப்பறி, செல்போன் பறிப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபடுவதை நிறுத்தி விட்டு கஞ்சா கடத்தலில் ஈடுபட்டேன். என் மீது போலீசாருக்கு சந்தேகம் வராமல் இருந்தது.
அதை சாதகமாக பயன்படுத்தி கொண்டு தொடர்ந்து கஞ்சா சப்ளையில் ஈடுபட்டேன். கஞ்சா சப்ளை செய்வதில் நான் ஒரு சின்னகுருவிதான். என்னை போல சிறுசிறு குருவிகள் சென்னையில் அதிகமாக இருக்கிறார்கள்.இவ்வாறு அதிர்ச்சி தகவலை அவர் கூறினார். இதையடுத்து அவரிடம் இருந்து 5 கிலோ 330 கிராம் கஞ்சா மற்றும் செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.மேலும் பறிமுதல் செய்யப்பட்ட செல்போனில் பேசிய குருவிகளின் செல்போன் நம்பர்களை ஆய்வு செய்து பட்டியல் ஒன்றை தயார் செய்து விரைவில் அவர்களையும் கைது செய்வோம் என்று போலீசார் தெரிவித்தனர்.