நீலகிரியில் பெய்யும் தொடர் மழையால் ஊட்டி அணைகளில் நீர்மட்டம் உயர்வு
ஊட்டி: கடந்த 20 நாட்களுக்கு மேலாக பெய்யும் மழையால், ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு தண்ணீர் வழங்க பயன்படும் முக்கிய அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், குறிப்பாக, ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தினமும் ஓரளவு மழை பெய்து வருகிறது. இதனால், ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கும் பெரும்பாலான அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்தால், அனைத்து அணைகளும் நிரம்ப வாய்ப்புள்ளது. மேலும், பார்சன்ஸ்வேலி அணை, ஊட்டி டைகர்ஹில், மார்லிமந்து போன்ற அணைகளிலும் தண்ணீர் அளவு உயர்ந்துள்ளது. இதனால், ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை.
குறிப்பாக, ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிக்கு தண்ணீர் வழங்க முக்கிய ஆதாரமாக உள்ள பார்சன்ஸ் வேலி அணை பகுதியில் நாள்தோறும் மழை பெய்து வருகிறது. இதனால், அந்த அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மேலும் வடகிழக்கு பருவமழை குறித்த காலத்தில் பெய்தால், அணைகளில் தண்ணீர் அளவு மேலும் உயர வாய்ப்புள்ளது. தற்போது ஊட்டி நகராட்சிக்குட்பட்பட்ட பெரும்பாலான அணைகளில் போதுமான தண்ணீர் உள்ளதால், ஓரிரு மாதங்களுக்கு தண்ணீர் பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.