நெல்லையில் ஐடி ஊழியர் ஆணவக் கொலை சிபிசிஐடி விசாரணை துவங்கியது: பெண் எஸ்ஐயை கைது செய்யக்கோரி 5வது நாளாக உடலை வாங்க மறுப்பு
சென்னையில் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர், கடந்த 27ம் தேதி நெல்லை கேடிசி நகரில் காதல் விவகாரத்தில் ஆணவக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து, பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து அவரது காதலியான பெண் சித்தா டாக்டர் சுபாஷினியின் தம்பி சுர்ஜித்தை கைது செய்தனர். தொடர்ந்து அவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். கவினை கொலை செய்யத் தூண்டியதாக சுர்ஜித்தின் பெற்றோர் ஆயுதப்படை எஸ்ஐக்களான சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீதும் பாளை. போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இருவரையும் கைது செய்தால் தான் கவின் உடலை வாங்குவோம் என கூறி அவரது பெற்றோர், உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, சரவணன், நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார். இந்நிலையில், சுபாஷினி தாய் கிருஷ்ணகுமாரியையும் கைது செய்ய வலியுறுத்தி கவினின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து சொந்த ஊரான ஆறுமுகமங்கலத்தில் 5வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இக்கொலை வழக்கில் போலீஸ் எஸ்ஐக்கள் இருவருக்கு தொடர்பு இருப்பதால், பாரபட்சமற்ற விசாரணை நடத்துவதற்காக பாளை. போலீசிடம் இருந்து வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணை தொடர்பான ஆவணங்கள், சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளின் பதிவு உள்ளிட்டவைகள், கவின், சுர்ஜித் பயன்படுத்திய செல்போன் ஆகியவற்றை பாளை உதவி கமிஷனர் சுரேஷ், நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பி ராஜ்குமார் வசம் ஒப்படைத்தார்.
இதனையடுத்து சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் உலகராணி வழக்கு பதிந்து கவின் ஆணவக்கொலை வழக்கு விசாரணையை துவங்கி உள்ளார். மேலும் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் சுர்ஜித், அவரது தந்தை சரவணன் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்த நெல்லை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளனர். படுகொலை செய்யப்பட்ட கவின் மற்றும் சுர்ஜித் ஆகியோரின் செல்போன் உரையாடலை ஆய்வு செய்து வருவதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர்.
* பெற்றோருக்கு கனிமொழி ஆறுதல்
தூத்துக்குடி தொகுதி எம்.பி. கனிமொழி கொலையான கவின் செல்வகணேசின் சொந்த ஊரான ஆறுமுகமங்கலத்திற்கு நேற்று நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் சென்றிருந்தனர். அவர்கள் கவின் செல்வகணேசின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இந்த சம்பவத்தில் சுர்ஜித்தின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். அவரது தாயையும் போலீசார் கைது செய்ய வேண்டும். எங்களுக்கு ஆதரவு தெரிவித்து சமுதாய அமைப்புகள் போராட்டம் நடத்திய நிலையில் அவர்களிடம் ஆலோசனை நடத்திய பின்னரே கவின் செல்வகணேசின் உடலை பெற்றுக் கொள்வோம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
* நெல்லையில் ஏடிஜிபி முகாம்
கவின் உடலை பெற்று கொள்ள மறுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் நேற்று முன்தினம் நெல்லை சென்றார். பின்னர், நெல்லை கமிஷனர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி சம்பவம் குறித்து, விசாரணயின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார். சிபிசிஐடி விசாரணை துவங்கி உள்ள நிலையில், நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று ஏடிஜிபி ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமாணி, சிபிசிஐடி டிஎஸ்பி ராஜ்குமார் நவ்ரோஜ், சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் உலகராணி, இந்த வழக்கில் முதற்கட்ட விசாரணை நடத்திய பாளை போலீஸ் உதவி கமிஷனர் சுரேஷ், பாளை இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றனர். கவின் உடலை பெற்றோர் பெற்று கொள்ளும் வரை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் நெல்லையில் தங்கியிருந்து விசாரணையை கண்காணிக்கவுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
* நான் கவினை உண்மையாக காதலித்தேன்: கொலை நடந்தது எப்படி, காதலி சுபாஷினி வீடியோ வைரல்
கவினின் காதலி சித்தா டாக்டர் சுபாஷினி பேசிய வீடியோ நேற்று வைரலாகி உள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது: ‘‘நான் தான் சுபாஷினி. நானும், கவினும் உண்மையாக காதலித்தோம். கொஞ்சம் செட்டில் ஆக டைம் தேவைப்பட்டது. மே 30ம் தேதியன்று சுர்ஜித்தும், கவினும் பேசிக்கிட்டாங்க. பின்பு சுர்ஜித் அப்பா கிட்ட சொல்லிட்டான். அப்பா என்கிட்ட இதுபற்றி கேட்டபோது, இல்ல அப்பான்னு சொல்லிட்டேன்.
ஏன்னா கவின் இன்னும் ஒரு 6 மாதத்தில் சொல்லுன்னு டைம் கேட்டிருந்தான். இதனாலே அப்பா கிட்ட சொல்லல. அதற்குள் சுர்ஜித், கவினிடம் என்னை பெண் பார்க்க வரச் சொல்லி அழைத்துள்ளான். சம்பவத்தன்று என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. நான் 28ம் தேதி மாலையில் தான் வரச் சொல்லியிருந்தேன். ஆனா, அவங்க தாத்தாவுக்கு உடம்பு சரியில்லன்னு 27ம் தேதியே கூட்டிட்டு வந்திருக்காங்க. வந்துட்டுதான் எனக்கு தகவல் சொன்னாங்க.
நான் அவங்க அம்மா, தாத்தாவை மருத்துவமனைக்கு கூட்டிட்டு போயிட்டு அவங்க கிட்டத்தான் பேசிகிட்டு இருந்தேன். கவின் அங்க வந்துட்டு உடனே கிளம்பி வெளியே போயிட்டான். ட்ரீட்மென்ட நான் சொல்லி முடிச்ச பிறகு, அவங்க அம்மா கவினுக்கு போன் பண்ணினாங்க. அவன் எடுக்கல. அதனால, நீங்க சாப்பிட போங்க, நான் வரச் சொல்றேன்னு சொன்னேன். அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சி. இதை தேவையில்லாம யாரும் வதந்தி கிளப்ப வேண்டாம்.
உங்களுக்கு தோணுறத பேசாதீங்க. எங்க அம்மா, அப்பாவுக்கு இதை பற்றி தெரியாது. இதோட அத விட்ருங்க. அவ்ளோதான்’’ என பேசியுள்ளார். மற்றொரு வீடியோவில், ‘‘எனக்கும், கவினுக்கும் என்ன நடந்தது என்று எனக்கும், கவினுக்கும் மட்டும் தான் தெரியும். எங்களது தொடர்பு குறித்தும், எங்கள் இருவர் குறித்தும் இனியும் யாரும் தப்பாக பேச வேண்டாம். யாருக்கும் எதுவும் தெரியாது.
உண்மை தெரியாமல் எல்லோரும் நிறைய பேச வேண்டாம். எனது தாய்க்கும், தந்தைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவர்களை தண்டிக்க வேண்டும் என நினைப்பது தப்பு. அவர்களை விட்டு விடுங்கள். இந்த விசாரணையில் எல்லோரும் அவரவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ, அதை எல்லாம் பேசி விட்டீர்கள். எனது உணர்வு என்ன, நான் என்ன நினைக்கிறேன் என்பதை ஒரு பெண் மட்டும் சமூக ஊடகத்தில் பேசியுள்ளார். அவருக்கு நன்றி’’ இவ்வாறு சுபாஷினி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
* தகவல் கொடுத்ததே அவர்தான்: மகன் ஆணவக்கொலையில் இன்ஸ்பெக்டருக்கு தொடர்பு: கவின் தந்தை கண்ணீர்
நெல்லையில் ஐடி ஊழியர் கவின் செல்வகணேஷ் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், அவரது தந்தை சந்திரசேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எனது மூத்த மகன் கவின் செல்வகணேஷ் சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவரும் சுபாஷினி என்பவரும் 7 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த விவரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவரவே, நாங்கள் மாற்று சமூகம் என்பதால் எங்களை மிரட்டத் தொடங்கினர்.
குறிப்பாக எனது மகன் கொல்லப்படுவதற்கு 20 நாட்களுக்கு முன்பே பாளையங்கோட்டையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் காசிப்பாண்டியன் என் மகனை தொடர்புகொண்டு ஒழுங்காக இரு, இல்லையென்றால் கை, கால்களை உடைத்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதை இறப்பதற்கு ஒரு நாள் முன்பு தான் என் மகன் என்னிடம் தெரிவித்தான். இதனிடையே என் மகன் கேடிசி நகர் சித்த மருத்துவமனைக்கு வரப்போவதை முன்கூட்டியே அறிந்து கொண்டு பெண்ணின் சகோதரனான சுர்ஜித்துக்கு தகவல் தெரிவித்ததே இன்ஸ்பெக்டர் காசிப்பாண்டியன் தான்.
மேலும் கொலை செய்துவிட்டு போலீஸ் நிலையத்தில் சுர்ஜித்தை ஆஜராகச் சொன்னதும் காசிப்பாண்டியன் தான். அவர் தகவல் தெரிவிக்கவில்லை என்றால் இன்று என் மகன் உயிரோடு இருந்திருப்பான். என் மகன் இறப்பிற்கு இன்ஸ்பெக்டர் காசிப்பாண்டியன் தான் மூலக்காரணம். ஏற்கனவே பல பிரச்னைகளில் சிக்கி சஸ்பெண்டு செய்யப்பட்டு மீண்டும் அதே பாளை. போலீஸ் நிலையத்தில் பணியாற்றி என்னைப் போல் பல தந்தைகளின் கண்ணீருக்கு காரணமாக இருக்கும் இன்ஸ்பெக்டர் காசிப்பாண்டியன் மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள்.
போலீஸ் நிலையத்தில் இருந்து கொண்டு மக்களுக்கு சேவை செய்யாமல், கூலிப்படை போல் செயல்பட்டு வரும் இன்ஸ்பெக்டர் காசிப்பாண்டியனை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய தமிழக அரசு உத்தரவிட வேண்டும். தற்போது வரை என் உறவினர்கள் மட்டுமே எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள். என் மகன் இறந்து இன்றோடு 5 நாட்கள் ஆகிவிட்டது. சில அரசியல் கட்சிகள் மட்டுமே வந்து எனக்கு ஆதரவாக பேசுகிறார்கள்.
காதலியின் தந்தை மட்டும் கைது செய்யப்பட்டால் போதாது, அவரது மனைவியான எஸ்ஐ கிருஷ்ணகுமாரியையும் கைது செய்ய வேண்டும். என் மகன் போல் இன்னொரு உயிர் போக கூடாது. என் மகன் சாவிற்கு நீதி கிடைக்கவில்லை என்றால் என் மகனின் உடலை வாங்க மாட்டோம், சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம். இவ்வாறு அவர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
* தடம் மாறிய தடகள வீரர்
கவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுர்ஜித் பிகாம் பட்டதாரி. பள்ளியில் படிக்கும் போதே தடகளத்தில் தடம் பதித்து வெற்றி ஈட்டியுள்ளார். ஜிம்மிற்கு சென்று பயிற்சி பெற்ற அவர் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் தனது படங்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
இதனை கண்டும் காணாமல் இருந்த காவல்துறையால் தடகள வீரர் தடம் மாறி உள்ளார். இனிமேலாவது காவல்துறை சமூக வலைதளங்களை தீவிரமாக கண்காணித்து இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
* திருமாவளவன் ஆர்ப்பாட்டம்
ஏரல் அருகே ஆறுமுகமங்கலத்தில் உள்ள கவின் செல்வகணேஷ் வீட்டிற்கு நேற்று மாலை விசிக தலைவர் திருமாவளவன் சென்று கவின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் பாளை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று கவின் உடலுக்கு திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார்.
இதையடுத்து பாளை தெற்குபஜார் லூர்துநாதன் சிலை அருகே, கவின் படுகொலை கண்டித்தும் ஆணவ படுகொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்ற வலியுறுத்தியும் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதைபோல் நெல்லை கேடிசி நகரில் ஆணவக்கொலை செய்யப்பட்ட கவின் சொந்த ஊரான ஆறுமுகமங்கலத்தில் உள்ள தந்தை மற்றும் தாயை நேரில் சந்தித்து பாஜ மாநில தலைவர் நயினார்நாகேந்திரன் ஆறுதல் தெரிவித்தார்.