நெல்லை ஆணவக்கொலையில் எஸ்.ஐ கைது: சிபிசிஐடிக்கு மாற்றம்: டிஜிபி உத்தரவு
இருந்தாலும் அவர்களின் ஒப்புதலுக்காக பல ஆண்டுகளாக காத்திருந்தனர். இதற்கிடையே, கவின் செல்வகணேஷ் தனது தாத்தாவை சித்தா டாக்டரான காதலி சுபாஷினியிடம் கடந்த 27ம் தேதி திருநெல்வேலிக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது சுபாஷினியின் தம்பி சுர்ஜித் (21), கவின் செல்வகணேஷிடம் பேச வேண்டும் என்று தனியாக அழைத்து வந்து, ஆணவக்கொலை செய்யும் நோக்கில் கொடூரமாக கத்தியால் வெட்டி படுகொலை செய்துள்ளார். இந்த படுகொலை சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து கவின் செல்வகணேஷை படுகொலை செய்த சுர்ஜித்தை கைது செய்தனர். மேலும் ஆணவக்கொலைக்கு காரணமான சுபாஷினியின் பெற்றோரும், உதவி ஆய்வாளர்களுமான சரவணனையும், கிருஷ்ணகுமாரியையும் சஸ்பெண்ட் செய்து தமிழ்நாடு சிறப்பு காவல் படை டிஐஜி விஜயலட்சுமி உத்தரவிட்டார். இந்த ஆணவக்கொலை சம்பவத்தால் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இரு சமுகத்தினரிடையே மோதல் போக்கு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால், ஐடி ஊழியர் கவின் செல்வகணேஷ் ஆணவக்கொலை வழக்கை பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றி நேற்று உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கவின் செல்வகணேஷ் என்பவர் கடந்த 27ம் தேதி திருநெல்வேலி மாநகரில் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக இறந்த கவின் செல்வகணேஷ் தாயார் கொடுத்த புகார் மனுவின் மீது பாளையங்கோட்டை காவல் நிலைய குற்ற எண்:396|2025 பிஎன்எஸ் சட்டப்பிரிவுகள் 296(பி), 49, 103(1) மற்றும் 3(1)(ஆர்), 3(1)(எஸ்), 3(2)(வி) தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டம் ஆகியவற்றில் குற்றம் சாட்டப்பட்ட சுர்ஜித், அவரது தந்தை சரவணன் மற்றும் அவரது தாயார் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டவரும், குற்றம் சாட்டப்பட்ட சுர்ஜித்தின் சகோதரியும் பழகி வந்த நிலையில், இது தொடர்பான பிரச்னையில் இந்த கொலை நடந்துள்ளதாக தெரியவருகிறது. குற்றம் சாட்டப்பட்ட சுர்ஜித் 27ம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். மேலும் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவரின் தந்தை மற்றும் தாய் ஆகியோர் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் காவல் சார்பு ஆய்வாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.
விசாரணை பாரபட்சமற்றதாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் இருப்பதை உறுதி செய்யும் விதமாக, இவர்கள் இருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.இவ்வழக்கின் தன்மை மற்றும் முக்கியவத்துவத்தை கருத்தில் கொண்டு, சுதந்திரமான, நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை உறுதி செய்வதற்கான இந்த வழக்கு குற்றப்பிரிவு குற்ற புலனாய்வுத்துறை (சிபிசிஐடி)க்கு மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், கொலையாளியின் தந்தையான எஸ்.ஐ சரவணனை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இதில் அவருக்கு தொடர்பு இருப்பது உறுதியானதை தொடர்ந்து, நேற்றிரவு அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
* 3வது நாளாக உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு
படுகொலை செய்யப்பட்ட கவின் செல்வகணேஷின் பெற்றோர், குற்றத்திற்கு காரணமான எஸ்ஐ தம்பதியை கைது செய்ய வேண்டும். எனது மகன் கொலைக்கு நீதி வேண்டும். அதுவரை நாங்கள் எனது மகன் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி உள்ளனர். நேற்று 3வது நாளாக போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும், எஸ்.ஐ தம்பதியை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என திட்டவட்டமாக கூறிவிட்டனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஏரல் அருகே ஆறுமுகமங்கலத்தில் உறவினர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.
கவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுர்ஜித் அரிவாள், கத்தியுடன் இருக்கும் விதவிதமான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய், தந்தை போலீஸ் துறையில் எஸ்ஐயாக பணியாற்றும் நிலையில், கவினை ஆணவக் கொலை செய்த வீச்சரிவாளுடன் இருக்கும் படங்களும், வெட்டரிவாள் மீது கால் வைத்திருக்கும் படங்களும், கார் மீது சாய்ந்து கொண்டு அரிவாளை தூக்கி காண்பிக்கும் படங்கள் என அரிவாளுடன் வித, விதமான போஸ்களில் சுர்ஜித் இருக்கும் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் ஒரு படம் பிப்ரவரி 14ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது.
அந்த படத்தில் அரிவாளுடன் போஸ் கொடுக்கும் சுர்ஜித், ‘விரைவில்’ என்று பதிவிட்டுள்ளார். இதன் மூலம் கொலை செய்ய போவதை முன்பே எச்சரித்து உள்ளார். சாதாரணமாக அரிவாளுடன் சமூக வலைதளங்களில் ஸ்டேட்டஸ் வைத்தால் வழக்கு போடும் போலீசாருக்கு சுர்ஜித் அரிவாளுடன் இருந்த படங்கள் சைபர் கிரைம் போலீசுக்கு எப்படி தெரியாமல் போனது என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இந்நிலையில், பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்ட சுர்ஜித்தை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமாணி உத்தரவிட்டார். இதையடுத்து சிறையில் உள்ள சுர்ஜித், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
ஆவணக்கொலை வழக்கில் கவினின் செல்போனும் முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது. கவின் கொலையாவதற்கு முன்பாக யார், யாரிடம் பேசினார், அதில் உள்ள படங்கள் ஆகியவற்றை கண்டறியும் முயற்சியிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். கவினின் தம்பி பிரவீன் மற்றும் உறவினர்கள் நேற்று முன்தினம் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அதிகாரிகளை சந்தித்து, சுர்ஜித்தின் பெற்றோரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து, கவின் பெற்றோரான எஸ்ஐக்கள் சரவணன், கிருஷ்ணகுமாரியிடம் போலீசார் ரகசிய இடத்தில் 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தி உள்ளனர்.
கவின் செல்வகணேசின் உடலை வாங்க மறுத்து போராடி வரும் பெற்றோர், உறவினர்கள் மற்றும் கிராம மக்களை அமைச்சர்கள் கே.என். நேரு, அனிதா ராதாகிருஷ்ணன், ெதன் மண்டல ஜஜி, நெல்லை டிஜஜி உள்ளிட்டோர் சந்தித்து ஆறுதல் கூறினர். அப்போது கவின் செல்வகணேஷின் குடும்பத்தினர், இக்கொலை வழக்கில் ஏற்கனவை கொலையாளி சுர்ஜித் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இதில் தொடர்புடைய சுர்ஜித்தின் பெற்றோரான போலீஸ் தம்பதியையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.