நாடு முழுவதும் கடந்த ஐந்து ஆண்டுகளில் பொது, முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளில் 2,187 கோடி பேர் பயணம்
- தூக்கம், கழிவறை, பாதுகாப்பை தாண்டி பயணம்
- அதிகபட்சமாக 2024-25ல் 651 கோடி பேர் பயணம்
சிறப்பு செய்தி
கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 2,187 கோடி ரயில் பயணிகள் பொதுப் பெட்டிகள் மற்றும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணம் செய்துள்ளனர். உலகின் மிகப்பெரிய ரயில்வே சேவை நிறுவனமான இந்தியன் ரயில்வே அரசு பொதுத்துறை நிறுவனமாகும். ரயில்களை சாமானியர்களின் வண்டி என்று அழைக்கலாம். ஏழைகளின் ரதம் என்றும் கூறலாம். பல ஆயிரம் மைல்கள் கடந்து தமிழகத்திற்கும், கேரளாவிற்கும், கர்நாடகாவிற்கும் வடமாநிலங்களில் இருந்து மக்கள் வருவதற்கு ரயில்களே முக்கிய காரணம். பெரும்பாலும் பணக்காரர்கள் ஏசி பெட்டிகளிலும், நடுத்தர மக்கள் ஜெனரல் ஸ்லீப்பர் கோச்சிலும், ஏழைகள் ஜெனரல் பெட்டியிலும் பயணிக்கிறார்கள். இதில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் யார் என்று கேட்டால் ஜெனரல் பெட்டிகளில் பயணிப்பவர்கள் தான். பயணிகள் நின்று கொண்டே நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது, இது உடல் ரீதியான அசவுகரியத்தையும் சோர்வையும் ஏற்படுத்துகிறது.
பொதுப் பெட்டிகளில் அடிப்படை வசதிகளான முறையான காற்றோட்டம், சுத்தமான கழிவறைகள், குடிநீர் வசதி மற்றும் இருக்கை வசதிகள் பற்றாக்குறையாக உள்ளன. இது பயணிகளுக்கு, குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோருக்கு பயணத்தை மிகவும் சிரமமாக்குகிறது. பொதுப் பெட்டிகள் மற்றும் கழிவறைகள் பெரும்பாலும் சுத்தமாக பராமரிக்கப்படுவதில்லை. அதிக பயணிகளின் பயன்பாடு காரணமாக, குப்பை மற்றும் அழுக்கு குவிகிறது. இது சுகாதாரமற்ற சூழலை உருவாக்கி, நோய்கள் பரவும் அபாயத்தை அதிகரிக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், பொதுப் பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு கணிசமாக உயர்ந்துள்ளது. 2020-21 முதல் 2024-25 வரையிலான காலகட்டத்தில், நாடு முழுவதும் 2,187 கோடி பயணிகள் ரயில்களின் பொதுப் பெட்டிகள் மற்றும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணித்துள்ளனர்.
இந்திய ரயில்வேயை, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள மக்கள் மலிவு விலை காரணமாக தேர்ந்தெடுத்தாலும், பொதுப் பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் அதிகரித்து, கடுமையான நெரிசலை ஏற்படுத்தியுள்ளது. 2020-21 முதல் 2024-25 வரையிலான காலகட்டத்தில், 2,187 கோடி ரயில் பயணிகள் பொதுப் பெட்டிகள் மற்றும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணித்துள்ளனர், இது வசதிகளின் பற்றாக்குறையை எடுத்துக்காட்டுகிறது.
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:
கோவிட் பாதிப்பு நிறைந்த 2020-21ம் ஆண்டில் 99 கோடி பயணிகள் பயணித்தனர். மேலும் 2021-22ம் ஆண்டில் இது 275 கோடியாக உயர்ந்தது. இது தொடர்ந்து 2022-23ம் ஆண்டில் 553 கோடி, 2023-24ம் ஆண்டில் 609 கோடி, மற்றும் 2024-25ம் ஆண்டில் 651 கோடியாக உயர்ந்துள்ளது. முழுமையாக குளிர்சாதன வசதி இல்லாத அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை அறிமுகப்படுத்தப்பட்டது. 14 சேவைகள் இயக்கப்படுகிறது. இருப்பினும், இந்த ரயில்கள் பயணிகளின் நெரிசலை குறைப்பதற்கு போதுமானதாக இல்லை. மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் 22 பெட்டிகளில் 12 பொதுப் பெட்டிகள் மட்டுமே உள்ளன. இது பயணிகளுக்கு போதிய இடவசதி இல்லாத நிலையை உருவாக்குகிறது. இவ்வாறு கூறினார்.
இந்த பயணிகள் எண்ணிக்கையின் அதிகரிப்பு, பொதுப் பெட்டிகளில் நெரிசல் மற்றும் பயண அசவுகரியங்களை அதிகப்படுத்தியுள்ளது. இந்திய ரயில்வேயில் 57,200 பொதுப் பெட்டிகளும், 25,000 குளிர்சாதன பெட்டிகளும் உள்ளன. மொத்தம் 82,200 பெட்டிகள். இதில் 54 லட்சம் நான்-ஏசி இருக்கைகளும், 15 லட்சம் ஏசி இருக்கைகளும் உள்ளன. ஆனால், இந்த இருக்கைகளின் எண்ணிக்கை பயணிகளின் தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை, குறிப்பாக பொதுப் பெட்டிகளில் பயணிக்கும் குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு பல சிரமங்களை ஏற்படுத்தும்.
2024 மற்றும் 2025ம் ஆண்டுகளில், ஹோலி போன்ற பண்டிகை காலங்களில் 13,500 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட போதிலும், பயணிகளின் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. மகா கும்பமேளாவின் போது (ஜனவரி 13 முதல் பிப்ரவரி 28 வரை) 17,300 ரயில்கள் இயக்கப்பட்டு 4.24 கோடி பயணிகள் பயணித்தனர். ஆனால், இந்த சேவைகளும் நெரிசலை கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்தன.
இந்திய ரயில்வே ஏழைகளுக்கு மலிவு விலையில் பயணிக்க உதவினாலும், பொதுப் பெட்டிகளில் நிலவும் நெரிசல், வசதிக் குறைபாடுகள், சுத்தமின்மை, பாதுகாப்பு பிரச்னைகள் மற்றும் பயண தாமதங்கள் ஆகியவை பயணத்தை சவாலாக்குகின்றன. இந்த சிக்கல்களை தீர்க்க ரயில்வே அமைச்சகம் மேலும் பெட்டிகளை சேர்ப்பது, வசதிகளை மேம்படுத்துவது மற்றும் சிறப்பு ரயில்களை திறம்பட நிர்வகிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.