மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே ரயில்வே கேட் நீண்டநேரம் திறக்கப்படாததால் ரயிலை மறித்து பொதுமக்கள் போராட்டம்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே ரயில்வே கேட் நீண்டநேரம் திறக்கப்படாததால் பொதுமக்கள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறும் வகையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது. மீஞ்சூர் முதல் காட்டூர் வரையிலான சாலைக்கு இந்த கட்டுமான பணிகள் நடைபெற்றுவரும் சூழலில் ரயில்வே தண்டவாளத்தின் மேலே பாலம் பணிகள் முடிந்து இணைப்பு மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இந்த பணிகள் நீதிமன்ற வழக்கு உள்ளிட்ட காரணங்களால் தாமதமாகி வருவதாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை இந்த ரயில்வே கேட் நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை என கூறி பொதுமக்கள் திடீர் ரயில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
சென்னையில் இருந்து கும்மிடிபூண்டி செல்லும் புறநகர் ரயில்களும் கும்மிடிபூண்டியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் ரயில்களும் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து நின்றதால் காலையில் அலுவளகம் செல்வோர், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிப்புக்குள்ளாகினர்.
நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு ரயில்வே கேட் திறக்கப்பட்டதை தொடர்ந்து சுமார் 1 மணி நேரம் காலதாமதமாக ரயில்கள் இயக்கப்பட்டுவருகின்றன.