மான்செஸ்டரில் பரபரப்பான நிலையில் கடைசி நாள் ஆட்டம்: தோல்வியில் இருந்து தப்பிக்குமா இந்தியா?: தொடரை வெல்ல துடிக்கும் இங்கிலாந்து
இந்திய பவுலிங்கில் ஜடேஜா 4, பும்ரா, வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 311 ரன் பின்தங்கிய நிலையில், 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால், சாய்சுதர்சன், வோக்ஸ் வீசிய முதல் ஓவரிலேயே அடுத்தடுத்த பந்தில் டக் அவுட் ஆகினர். இதையடுத்து ஜோடி சேர்ந்த கே.எல்.ராகுல் கேப்டன் சுப்மன்கில் மேற்கொண்டு விக்கெட் விழாமல் பொறுமையாக ஆடினர்.நேற்றைய 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 63 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 174 ரன் எடுத்திருந்தது. கே.எல்.ராகுல் 87, சுப்மன் கில் 78 ரன்னுடன் இன்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர்.
இந்தியா இன்னும் 137 ரன் பின்தங்கிய நிலையில் இன்று ஆல்அவுட் ஆகாமல் தாக்குப்பிடித்து ஆடினால் தான் டிராவில் முடிக்க முடியும். குறைந்த பட்சம் இன்று 70 ஓவர் வரை தாக்குப்பிடித்து ஆடி 180 ரன் அளவிற்காவது முன்னிலை பெற்றால் தான் தோல்வியில் இருந்து தப்பலாம். ஆனால் காயத்தில் சிக்கி உள்ள ரிஷப் பன்ட், ஆல்ரவுண்டர்கள் ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் மட்டுமே உள்ளனர். எனவே இந்தியா தோல்வியில் இருந்து தப்புமா என்ற ரசிகர்களின் சந்தேகத்திற்கு மத்தியில் கடைசி நாள் ஆட்டம் பரபரப்பாக தொடங்கியது.
ரிஷப் பன்ட் பேட் செய்வார்;
இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் நேற்று ஆட்டம் முடிந்த பின்னர் அளித்த பேட்டி: காயத்தில் இருந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் ரிஷப் பன்ட் இன்று பேட்டிங் செய்வார் என்று நினைக்கிறேன். ராகுல்-கில் நிறைய நம்பிக்கையையும் உறுதியையும் காட்டியுள்ளனர். ஆரம்பத்தில் 2 விக்கெட் இழந்த கடினமான நேரத்தில், அவர்கள் பேட்டிங் செய்த விதம் மிகவும் அற்புதமானது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்குப் பிறகு சுப்மன் தனது பேட்டிங் முறையை மாற்றிக்கொண்டார். இன்று சில ஷாட்களை வெற்றிகரமாக விளையாடினார், சில ஷாட்களை வெற்றிகரமாகத் தவிர்த்தார் என்றார். மேலும் கடைசி நாள் ஆட்டம் பற்றி அவர் கூறுகையில், தனிப்பட்ட முறையில் என்னை கேட்டால், முன்கூட்டியே திட்டமிட்ட ஷாட்களை விளையாட வேண்டியதில்லை. பந்தின் தகுதி அடிப்படையில் விளையாட வேண்டும். சில சமயங்களில் தேவையில்லாமல் ரிஸ்க் எடுப்பதைத் தவிர்க்கலாம் என்றார்.
இன்று ஸ்டோக்ஸ் பந்து வீசுவார்;
இங்கிலாந்து உதவி பயிற்சியாளர் மார்கஸ் ட்ரெஸ்கோதிக், 4வது நாளில் இன்னும் சில விக்கெட்டுகள் கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் ராகுல்-கில் நன்றாக பேட் செய்தனர். 25, 30 ஓவர்களுக்கு பின்னர் பந்து பழையதாகி விட்டால் கொஞ்சம் சவாலாக மாறும். இதனால் இந்த ஜோடியை பிரிக்கலாம் என உணர்ந்தோம். ஆனால் அது நடக்கவில்லை. இன்று செய்ய வேண்டிய வேலை கொஞ்சம் இருக்கிறது. ஸ்டோக்ஸ் பேட் செய்யும் போது தடுமாறி விழுந்தார். முழு உடற் தகுதியில்லாததால் 4வது நாளில் பந்துவீசவில்லை. கடைசி நாளில் அவர் பந்துவீசுவார் என நம்புகிறேன் என்றார்.