மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்குள் ரம்மி விளையாடிய அமைச்சருக்கு விளையாட்டுத் துறை ஒப்படைப்பு..!!
மும்பை: மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்குள் ஆன்லைன் ரம்மி விளையாடி சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் மாணிக்ராவ் கோகட்டேவிடம் இருந்து வேளாண் துறை பறிக்கப்பட்டு, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை வழங்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது, தேசியவாத காங்கிரஸை சேர்ந்த வேளாண் துறை அமைச்சர் மாணிக்ராவ் கோகடே, ரம்மி விளையாடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகின. இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.
இதற்கிடையில், அமைச்சர் தனது செயல்களை நியாயப்படுத்துமாறு பேசி உள்ளார். "கேமரா இருப்பது எனக்குத் தெரிந்தால், நான் ஏன் அங்கே அமர்ந்து விளையாட வேண்டும்? நான் அதைத் தவிர்க்க விரும்பினேன், இரண்டு முறை முயற்சித்தேன், விளையாட்டைத் தவிர்ப்பது எப்படி என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அடுத்த நொடியில், நான் அதைத் தவிர்த்துவிட்டேன் என்று கோகேட் கூறினார்.
இந்நிலையில், அவருக்கு தண்டனையாக வேளாண் துறை பறிக்கப்பட்டு, அவருக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சகப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக விளையாட்டுத் துறையை கையாண்ட தத்தத்ராயா பார்னே வேளாண் துறையை நிர்வகிப்பார் என அறிவிக்கப்பட்டது.