மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா 20ம் தேதி தொடக்கம்: செப்.1ல் சுவாமிக்கு பட்டாபிஷேகம்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக செப்.1-ம் தேதி காலை வளையல் விற்றல் லீலை நடைபெறும். அன்று மாலையில் சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெறும். செப்.2ல் நரியை பரியாக்கிய திருவிளையாடல், 3ம் தேதி புட்டுக்கு மண் சுமந்த லீலை, 4ல் விறகு விற்ற லீலை நடக்கிறது. 5ம் தேதி காலை சட்டத்தேர் நடக்கிறது. 6ம் தேதி தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறும். அன்று இரவு திருவீதி புறப்பாடு முடிந்து 16 கால் மண்டபத்தில் திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமியும், திருவாதவூர் மாணிக்கவாசகர் விடை பெறுதல் நிகழ்வும் நடைபெறும். மதுரையம்பதியில் இறைவன் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களில், 12 சிறுவிளையாடல்கள் ஆவணி மூலத்திருவிழாவில் நடைபெறுவது முக்கிய அம்சமாகும். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.