மத்திய பிரதேசத்தில் கொட்டிய கனமழையால் வெள்ளம்: 2900 பேர் வெளியேற்றம்
போபால்: மத்திய பிரதேசத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சிவ்புரி, குனா மற்றும் அசோக்நகர் ஆகிய பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல ஆறுகளில் அபாய கட்டத்தைத் தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், நூற்றுக்கணக்கான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சிவ்புரி மாவட்டத்தில், நீர்நிலைகள் நிரம்பி வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளதால் இந்திய ராணுவ வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் உள்ளூர் காவல்துறையினருடன் இணைந்து தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். திண்டோரி, விடிஷா, ஜபாப்பூர், நர்மதாபுரம், அலிராஜ்பூர், ராஜ்கார் மற்றும் பேடல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் வெள்ளம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
இதுகுறித்து அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் கூறுகையில், மொரேனா, ரைசன், குணா, அசோக்நகர், சிவ்புரி, சாகர் மற்றும் விடிஷா உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 2,900க்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, உடை, மற்றும் மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன’ என்றார்.
மத்திய பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்துக்கு சுமார் 220 மி.மீ. அளவிலான கனமழை பெய்யக்கூடும் என்றும் பொதுமக்கள் நீர்நிலைகள் மற்றும் ஆபத்தான கட்டடங்களுக்கு அருகில் செல்ல வேண்டாம் என்றும், எந்தவொரு அவசரத்திற்கும் மாவட்ட வெள்ள கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.