தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மக்களவையில் நள்ளிரவு வரை நடந்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ விவாதம்; ஆதாரங்களை கேட்டு ஒன்றிய அரசை மிரள வைத்த எதிர்க்கட்சிகள்: இன்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில்

புதுடெல்லி: மக்களவையில் நேற்று நள்ளிரவு வரை நடந்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ விவாதத்தின் போது ஆதாரங்களைக் கேட்டு ஒன்றிய அரசை எதிர்க்கட்சிகள் மிரள வைத்த நிலையில், இன்று மக்களவையில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில் அளிக்கின்றனர். மேலும் இன்று மாநிலங்களவையிலும் காரசார விவாதம் நடப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து, ஒன்றிய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வைத்து வந்தன.
Advertisement

எதிர்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, நேற்று மதியம் 1 மணிக்கு மக்களவையில் விவாதம் தொடங்கியது. கிட்டத்தட்ட 16 மணி நேரம் விவாதம் நடத்த ஒதுக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை 1.30 மணி வரை விவாதம் நடந்துள்ளது. அதிகாலை 1.30 மணிக்குதான் நாடாளுமன்றத்தில் இருந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியே வந்தார். இந்த விவாதத்தின் போது, ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே மிகக் கடுமையான வார்த்தை மோதல்கள் அரங்கேறின. நாட்டின் பாதுகாப்பு தொடர்பான இந்த விவாதத்தில், தலைவர்கள் ஒருவரையொருவர் நேரடியாகவும், மறைமுகமாகவும் கடுமையாகத் தாக்கிப் பேசியது மக்களவையே அதிர வைத்தது.

விவாதத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் நமது எத்தனை விமானங்கள் சேதமடைந்தன என்று கேட்பதற்குப் பதிலாக, எதிரியின் விமானங்களை நமது ராணுவம் சுட்டு வீழ்த்தியது எத்தனை என்று கேளுங்கள்; எத்தனை தீவிரவாத முகாம்களை அழித்தொழித்தது என்று கேளுங்கள். ஒரு தேர்வில் மாணவன் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெறும்போது, அதுதான் முக்கியம். தேர்வின் போது அவனது பென்சில் உடைந்ததா அல்லது பேனா தொலைந்து போனதா என்பதல்ல’ என்று அவர் கூறியது, விவாதத்தின் போக்கையே மாற்றியது.

இதற்குப் பதிலளித்துப் பேசிய காங்கிரஸ் கட்சியின் மக்களவை துணைத் தலைவர் கவுரவ் கோகோய், ‘அப்படியானால், ‘ஆபரேஷன் சிந்தூர்’ ஏன் பாதியில் நிறுத்தப்பட்டது? பஹல்காம் தாக்குதலுக்குக் காரணமான தீவிரவாதிகள் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை? தீவிரவாத தாக்குதலுக்குப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும். இந்த அரசு ஆணவத்துடன் செயல்படுகிறது. உண்மையைச் சொல்லுங்கள்; அதற்கான ஆதாரங்களை காட்டுங்கள்; நாடு உங்கள் பக்கம் நிற்கும்’ என்று அவர் முழங்கினார்.

இந்த விவாதத்தின்போது வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பதிலளித்தபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கூச்சலிட்டனர். இதனால் கடும் கோபமடைந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘நமது நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரை நம்பாமல், ஒரு வெளிநாட்டுத் தலைவரை (டிரம்ப்) நம்புகிறீர்கள். இதுதான் உங்கள் அணுகுமுறை என்றால், நீங்கள் இப்போது அமர்ந்திருக்கும் இடத்திலேயே (எதிர்கட்சிகளாக) இன்னும் 20 ஆண்டுகள் அமர்ந்திருக்க வேண்டியதுதான்.

நாங்கள் பேசும்போது அமைதியாகக் கேட்டோம். இப்போது எங்களால் சொல்லப்படும் உண்மையைக் கேட்கக்கூட உங்களுக்குப் பொறுமையில்லையா?’ என்று கடுமையாக எச்சரித்தார். தொடர்ந்து ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சர் லலன் சிங் பேசுகையில், ‘காங்கிரஸ் ஆட்சியில்தான் தீவிரவாதம் தழைத்தோங்கியது. தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட உங்களுக்கு தைரியமும் இல்லை; திறமையும் இல்லை. நீங்கள் வெறும் கண்துடைப்பு வேலைகளையே செய்தீர்கள். ராணுவத்தின் வீரத்தைப் பாராட்டாமல், எத்தனை விமானங்கள் விழுந்தன என்று கேட்கிறீர்கள்’ என்று குற்றம் சாட்டினார். அதன்பின் பாஜக எம்.பி அனுராக் தாக்கூர் பேசுகையில், ‘எதிர்க்கட்சித் தலைவர் (Leader of Opposition - LOP) இப்போது ‘பாரதத்தை எதிர்க்கும் தலைவராக’ (Leader Opposing Bharat - LOB) மாறிவிட்டார். அவர் பாகிஸ்தானின் பொய்ப் பிரசாரத்திற்கான ‘போஸ்டர் பாய்’ ஆகிவிட்டார்.

இந்திய தேசிய காங்கிரஸ் (INC) இப்போது ‘இஸ்லாமாபாத் தேசிய காங்கிரஸ்’ ஆகிவிட்டது போல் தெரிகிறது’ என்று அவர் விமர்சித்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதன்பின் ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி பேசுகையில், ‘காஷ்மீரில் ஏழரை லட்சம் பாதுகாப்புப் வீரர்கள் இருக்கும்போது, நான்கு எலிகள் (தீவிரவாதிகள்) எப்படி உள்ளே நுழைந்து நம் மக்களைக் கொன்றன? வெள்ளைக்காரர் (டிரம்ப்) வெள்ளை மாளிகையில் அமர்ந்து போர் நிறுத்தத்தை அறிவிக்கிறார். ரத்தமும் தண்ணீரும் ஒன்றாகப் பாயாது என்றீர்கள்; வர்த்தகத்தை நிறுத்தியவர்கள், பாகிஸ்தானுடன் கிரிக்கெட் மட்டும் ஏன் விளையாடுகிறீர்கள்?’ என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். ஒட்டுமொத்தமாக, இந்த விவாதம் தேசியப் பாதுகாப்பு குறித்த ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையேயான ஆழமான கருத்து வேறுபாடுகளையும், நம்பிக்கையின்மையையும் வெளிச்சம் போட்டுக் காட்டியது.

ஒன்றிய அரசு ‘ஆபரேஷன் சிந்தூர்’ வரலாற்று வெற்றி என்றும், ‘பாகிஸ்தான் இந்தியாவிடம் மண்டியிட்டது’ என்றும் வாதிட, எதிர்கட்சிகளோ ஒன்றிய அரசு உண்மைகளை மறைப்பதாகவும், அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணிந்துவிட்டதாகவும், உள்நாட்டுப் பாதுகாப்பில் தோல்வியடைந்துவிட்டதாகவும் கடுமையாகக் குற்றம் சாட்டின. இந்தச் சூழ்நிலையில்தான், விவாதத்தின் அடுத்த கட்டம் மக்களவையில் இன்று நடைபெற உள்ளது. நேற்று நடந்த விவாதத்தின்போது எழுந்த அனைத்துக் கேள்விகளுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளிக்கும் விதமாக, பிரதமர் மோடி இன்று மக்களவையில் உரையாற்ற உள்ளார். மதியம் 12 மணி முதல் 1 மணிக்குள் மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பேசுகிறார்.

பிரதமர் மோடி மாலையில் தனது உரையை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலங்களவையிலும் இன்று விவாதம் நடைபெறு்கிறது. மோடியும், அமித் ஷாவும் பேசவிருப்பதால், ஒட்டுமொத்த தேசத்தின் பார்வையும் நாடாளுமன்றத்தை நோக்கியே உள்ளது. பிரதமர் மோடியின் பதில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்குமா அல்லது புதிய விவாதங்களைக் கிளப்புமா என்பது இன்று தெரிந்துவிடும். எதிர்க்கட்சிகளின் கடுமையான தாக்குதல்களுக்கு பிரதமர் மோடியும், அமித் ஷாவும் அளிக்கும் பதில்கள், இந்த விவகாரத்தின் அடுத்தகட்டப் போக்கைத் தீர்மானிக்கும் என்பதால், இன்றைய மக்களவைக் கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

2 அமைச்சருக்கு மோடி பாராட்டு;

‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து நடந்த விவாதத்தின் போது ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகிய இருவரும் கூறிய கருத்துகள் கவனத்தை ஈர்த்துள்ளன. ,

இந்த நிலையில், இரு அமைச்சர்களின் நாடாளுமன்ற உரைகளையும் பிரதமர் மோடி வெகுவாகப் பாராட்டியுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், ‘வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் பேச்சு மிகச் சிறப்பாக இருந்தது. தீவிரவாத அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதில் இந்தியாவின் நிலைப்பாட்டை ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் உலகம் தெளிவாகக் கேட்டதை அவர் திறம்பட எடுத்துரைத்தார். அதேபோல் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜியின் உரை மிகச் சிறப்பானது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் நமது ராணுவத்தின் வெற்றி மற்றும் வீரம் குறித்து கூர்மையான கருத்துகளை வெளியிட்டு சிறப்பாக எடுத்துரைத்தார்’ என்று பாராட்டிப் பதிவிட்டுள்ளார்.

‘தமாஷ்’ என்று கூறிய காங்கிரஸ் எம்பி;

மக்களவையில் நடந்த விவாதத்தின்போது பேசிய காங்கிரஸ் எம்.பி பிரணிதி ஷிண்டே, இந்த நடவடிக்கை ஒன்றிய அரசின் ஒரு ‘தமாஷ்’ நடவடிக்கை என்றும், இது உண்மையான வெற்றியை விட ஊடகங்களுக்கான நாடகமாகவே இருந்ததாக கடுமையாக விமர்சித்தார். மேலும் அவர் பேசுகையில், ‘இந்த நடவடிக்கையில் உண்மையில் என்ன சாதிக்கப்பட்டது? எத்தனை தீவிரவாதிகள் பிடிபட்டனர்? எத்தனை போர் விமானங்களை நாம் இழந்தோம்? இதற்கு யார் பொறுப்பு?. ஒன்றிய அரசு இதற்கு தெளிவான பதிலளிக்க வேண்டும்’ என்று அவர் கோரினார். பிரணிதி ஷிண்டேவின் இந்தப் பேச்சு, அவையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதிலளித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘காங்கிரஸ் எம்.பி பிரணிதி ஷிண்டே பயன்படுத்திய ‘தமாஷ்’ என்ற வார்த்தை, நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ பதிவுகளிலிருந்து நீக்கப்பட வேண்டும். நாடாளுமன்ற விவாதங்களில் பொருத்தமற்ற அல்லது முறையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தும்போது, அவற்றை அவைக் குறிப்பிலிருந்து நீக்கும் அதிகாரம் மக்களவை சபாநாயகருக்கு உண்டு’ என்றார். தொடர்ந்து பிரணிதி ஷிண்டே பயன்படுத்திய ‘தமாஷ்’ என்ற வார்த்தை அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

தீவிரவாதத்தை முடிவுகட்ட 5 அம்சக் கொள்கை;

இந்த விவாதத்தில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ‘ஏப்ரல் 22 (பஹல்காம் தாக்குதல்) முதல் ஜூன் 17 (போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு ஒரு மாதத்திற்குப் பிறகு) வரை பிரதமர் மோடிக்கும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கும் இடையே எந்தவிதமான தொலைபேசி உரையாடலும் நடைபெறவில்லை. ‘ஆபரேஷன் சிந்தூர்’ சமயத்தில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வேன்ஸ், பிரதமர் மோடியை தொலைபேசியில் அழைத்து, பாகிஸ்தானிடமிருந்து மிகப்பெரிய தாக்குதல் வரவிருப்பதாக எச்சரித்தார். அதற்குப் பிரதமர் மோடி, ‘இந்தியா இன்னும் வலுவாகப் பதிலடி கொடுக்கும்’ என்று பதிலளித்தார். ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள 193 நாடுகளில், பாகிஸ்தானைத் தவிர வெறும் மூன்று நாடுகள் மட்டுமே ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை எதிர்த்தது. எல்லை தாண்டிய தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் தற்போது புதிய இயல்புநிலை உருவாகியுள்ளது. தீவிரவாதத்தை எதிர்கொள்ள புதிய ஐந்து அம்சக் கொள்கையை பின்பற்றுகிறோம். அவற்றில் தீவிரவாதிகள் வெறும் சாதாரண நபராக கருதப்பட மாட்டார்கள். எல்லை தாண்டிய தீவிரவாதத்திற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும். தீவிரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒன்று சேர சாத்தியமில்லை. அணு ஆயுத மிரட்டல்களுக்கு இந்தியா ஒருபோதும் பணியாது. தீவிரவாதமும் நல்லுறவும் ஒருபோதும் இணைந்திருக்காது; ரத்தமும் தண்ணீரும் ஒன்றாகப் பாய முடியாது என்பதே எங்களின் நிலைப்பாடு. மேலும், அமெரிக்காவின் மத்தியஸ்தம் குறித்த எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். இந்தியா-பாகிஸ்தான் மோதலில் எந்த மூன்றாம் தரப்பு மத்தியஸ்தமும் இல்லை’ என்பதை உறுதியாகத் தெரிவித்தார்.

மாநிலங்களவையில் 9 மணிநேரம் விவாதம்;

ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் தொடர்பாக மக்களவையில் 16 மணி நேரமும், மாநிலங்களவையில் 9 மணி நேரமும் என மொத்தம் 25 மணி நேர விவாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. நேற்று மக்களவையில் மதியம் 12 மணிக்கு தொடங்க வேண்டிய விவாதம் மதியம் 1 மணி வாக்கில் தொடங்கி, இன்று அதிகாலை 1.30 மணியளவில் முடிந்தது. இந்த விவாதத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் பங்கேற்று எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். மாநிலங்களவையில் இன்று நடக்கும் விவாதத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விவாதத்தை தொடங்குகிறார். காங்கிரஸ் கட்சிக்கு 2 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த விவாதத்திலும் ஒன்றிய அமைச்சர்கள் எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளிப்பார்கள். மேலும் ஆபரேஷன் சிந்தூரின் வெற்றி, இந்தியாவின் பாதுகாப்பு உத்திகள், பாகிஸ்தானுடனான எல்லைப் பதற்றங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

Advertisement