கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் பயோ-மைனிங் முறையில் இதுவரை 16.67 இலட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றம்
கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் பயோ-மைனிங் முறையில் சுமார் 250 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தில் நீண்டகாலமாக கொட்டப்பட்டுவுள்ள திடக்கழிவுகளை உயிரி அகழ்ந்தெடுத்தல் முறையில் அறிவியல் ரீதியாக திடக்கழிவுகளை அகழ்ந்தெடுத்து நிலத்தை மீட்டெடுப்பதற்கான ஒரு முக்கிய முயற்சி ஆகும். கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம் 1 முதல் 8 வரையிலான பகுதிகளிலிருந்து சேகரிக்கப்படும் திடக்கழிவுகள் இந்த கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டுள்ளன.
கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில், ரூ.640.83 கோடி மதிப்பில் சுமார் 252 ஏக்கர் நிலத்தில் கொட்டப்பட்டுள்ள 66,52,506 மெட்ரிக் டன் திடக்கழிவுகளை உயிரி அகழ்ந்தெடுத்தல் முறையில் (Bio-Mining) பிரித்தெடுத்து நிலத்தை மீட்டெடுக்கும் பணி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டம் 6 சிப்பங்களாக பிரிக்கப்பட்டு, மூன்று ஒப்பந்தக்காரர்களால் செயல்படுத்தப்படுகிறது. இப்பணிகளை இரண்டு ஆண்டுகளில் முடித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் அகழ்ந்தெடுக்கப்பட வேண்டிய 66,52,506 மெட்ரிக் டன் அளவிலான திடக்கழிவுகளில், இதுவரை 16,67,428 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டு 2 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு வாரங்களில் 1 ஏக்கர் நிலத்தில் திடக்கழிவுகள் அகற்றப்பட்டு மேலும் 1 ஏக்கர் நிலம் மீட்கப்படும்.
இவ்வாறு மீட்டெடுக்கப்படும் நிலத்தில் பசுமைப் பரப்பினை அதிகரிக்கும் வகையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் நாட்டு மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், திடக்கழிவுகள் அகழ்ந்தெடுக்கப்பட்ட மேற்கண்ட நிலத்தில் ரூ.57 இலட்சம் மதிப்பீட்டில் சுற்றுவேலி அமைத்து, குழாய் மூலம் நீர்ப்பாசன வசதியுடன் சுமார் 1500 நாட்டு மரக்கன்றுகளை நடுவதற்கும், ஒரு வருட கால பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் கோடைக் காலத்தில் நெகிழிக் கழிவுகள் (RDF) மூலம், எதிர்பாராமல் எற்படும் தீ விபத்துகளை தடுக்கும் பொருட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 24 மணி நேரமும் தண்ணீர் தெளிப்பான் கொண்ட லாரிகள் ஒப்பந்ததாரர்களால் நிறுத்தப்பட்டுள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் 9,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், 1.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட அவசரநிலை நீர்த்தொட்டி மின்சார மோட்டர் வசதியுடன் கொடுங்கையூரில் உள்ளது.
இந்த திட்டம் மூலம் மீட்கப்படும் நிலப்பகுதி பசுமை வளையமாக மாற்றப்பட்டு, சூழலியல் சமநிலையை பாதுகாக்கவும், உள்ளூர் காற்றுத் தரத்தை உயர்த்தவும் உதவும். மேலும், இது நிலைத்தன்மை கொண்ட குப்பைக் கிடங்கு மறுசீரமைப்பிற்கான முன்னோடியான மாதிரியாக அமையும்.